Loading...
150 மாணவர்களின் வேலைவாய்ப்பை ரத்து செய்த நிறுவனங்கள்! ஆரக்கிள் உட்பட 22 நிறுவனங்களுக்கு 2 ஆண்டுகள் ஐஐடி தடை
ஆரக்கிள் உட்பட 22 நிறுவனங்களுக்கு 2 ஆண்டுகள் ஐஐடி தடை

150 மாணவர்களின் வேலைவாய்ப்பை ரத்து செய்த நிறுவனங்கள்! ஆரக்கிள் உட்பட 22 நிறுவனங்களுக்கு 2 ஆண்டுகள் ஐஐடி தடை

எழுதியவர் Sekar Chinnappan
Sep 25, 2026
04:15 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் உள்ள 23 ஐஐடி உயர்கல்வி நிறுவனங்களில் பயின்று 2026-இல் பட்டப்படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு வளாக வேலைவாய்ப்பு மூலம் ஆஃபர் லெட்டர் வழங்கிய 22 நிறுவனங்கள், தற்போது அந்த வேலைவாய்ப்புகளை ரத்து செய்துள்ளன. இதனால் 150-க்கும் மேற்பட்ட மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அகில இந்திய ஐஐடி வேலைவாய்ப்புக் குழு அந்த 22 நிறுவனங்களுக்கும் அடுத்த 2 ஆண்டுகளுக்கு வளாக நேர்காணலில் பங்கேற்க தடை விதிக்க முடிவு செய்துள்ளது.

அமெரிக்க நிறுவனங்கள்

ஆரக்கிள் உட்பட முன்னணி அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நடவடிக்கை

ஐஐடி மாணவர்களுக்கு வழங்கிய சுமார் 40 வேலைவாய்ப்புகளை ரத்து செய்த பிரபல அமெரிக்கச் மென்பொருள் நிறுவனமான ஆரக்கிள், இந்த தடைப் பட்டியலில் முதன்மையாக இடம்பெற்றுள்ளது.

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சார்ந்த கட்டமைப்பு செலவுகள் அதிகரித்து வருவதால், ஆரக்கிள் நிறுவனம் உலகம் முழுவதும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

ஆரக்கிள் தவிர பல முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் மாணவர்களுக்கு வழங்கிய பணி நியமனக் கடிதங்களை திரும்பப் பெற்றுள்ளதால் இந்த சவாலான நிலை உருவெடுத்துள்ளது.

காலக்கெடு

நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட காலக்கெடுவும் ஐஐடி நிர்வாகத்தின் அதிரடி முடிவும்

முன்னதாக கடந்த ஜூன் மாதமே பணி நியமனங்களை உறுதி செய்ய வேண்டும் அல்லது பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 3 மாத சம்பளத்தை நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என ஐஐடி குழு கெடு விதித்திருந்தது.

தொடர்ந்து செப்டம்பர் 15 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட போதிலும், பல நிறுவனங்கள் மாணவர்களை பணியில் சேர்க்க முன்வரவில்லை.

இதனால் ஐஐடி கவுகாத்தி பேராசிரியர் ஜான் ஜோஸ் தலைமையில் கூடிய அனைத்து ஐஐடி தலைவர்களும், அடுத்த இரண்டு ஆண்டு கல்விக்காலத்திற்கு இந்த நிறுவனங்களுடன் எந்தவொரு தொடர்பும் வைத்துக்கொள்வதில்லை எனத் தீர்மானித்துள்ளனர்.

ADVERTISEMENT

மாற்று வேலை

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மாற்று வேலைவாய்ப்பு வழங்க ஐஐடி முயற்சி

வேலைவாய்ப்பை இழந்து தவிக்கும் 150-க்கும் மேற்பட்ட மாணவர்களின் சுயவிவரங்களை, வளாக வேலைவாய்ப்பிற்கு வரும் பிற முன்னணி நிறுவனங்களுக்கு பகிர்ந்து அவர்களுக்கு மாற்று வேலை வழங்கிட ஐஐடி வேலைவாய்ப்பு மையங்கள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றன.

இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் 20 முதல் 30 சதவீத மாணவர்கள் புதிய வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

டிசம்பர் மாதம் முதல் நடப்பு ஆண்டிற்கான புதிய வளாக நேர்காணல்கள் தொடங்கவுள்ள நிலையில், மாணவர்களின் நலனை பாதுகாக்க ஐஐடிகள் இணைந்து இத்தகைய கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளன.

ADVERTISEMENT