யுத்தகளத்தில் ஏஐ பயன்பாடு! 140 இந்திய ராணுவ வீரர்களுக்கு அதிநவீன சைபர் பாதுகாப்பு பயிற்சி வழங்கியது ஐஐடி
செய்தி முன்னோட்டம்
ரஷ்யா - உக்ரைன் உள்ளிட்ட பல்வேறு போர்களிலும் ஏஐ உள்ளிட்ட தொழில்நுட்ப பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், இந்திய ராணுவத்தின் சென்ட்ரல் கமாண்டை சேர்ந்த 140 வீரர்களுக்கு, ஐஐடி கான்பூர் நிறுவனம் தனது சிறப்பு சைபர் பாதுகாப்பு சான்றிதழ் திட்டத்தின் மூலம் பயிற்சி அளித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 70 வீரர்கள் அடங்கிய இரண்டாவது பேட்ச், வெற்றிகரமாகத் தங்களது 6 மாத காலப் பயிற்சியை முடித்துள்ளனர். ஐஐடி கான்பூரின் 'C3iHub' அமைப்பால் நடத்தப்பட்ட இந்த பயிற்சியின் நிறைவு விழா, லக்னோவில் உள்ள ராணுவத்தின் சென்ட்ரல் கமாண்ட் தலைமையகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
6 மாத பயிற்சி
வகுப்பறை மற்றும் நடைமுறைப் பயிற்சி கொண்ட 6 மாத திட்டம்
ராணுவ வீரர்களின் சைபர் பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்துவதற்காக இந்த 6 மாத கால கலப்பின சான்றிதழ் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் இரண்டு கட்டங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் முதல் 3 மாதங்கள் அடிப்படைப் பயிற்சி பாடப்பிரிவும், அடுத்த 3 மாதங்கள் அதிநவீன உயர்நிலைப் பயிற்சி பாடப்பிரிவும் அடங்கும்.
இதில் வகுப்பறை வழி கற்றல் மற்றும் நேரடி நடைமுறைப் பயிற்சிகள் ஆகிய இரண்டும் இணைந்து வீரர்களுக்கு வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
தொழில்நுட்பங்கள்
அடிப்படைப் பயிற்சி பிரிவில் கற்றுத்தரப்பட்ட தொழில்நுட்பங்கள்
தொடக்கக் கட்ட அடிப்படைப் பயிற்சியில் லினக்ஸ் இயங்குதளம், நெட்வொர்க்கிங், சைபர் அச்சுறுத்தல் உளவுத்துறை, ஆபரேட்டிங் சிஸ்டம் பாதுகாப்பு மற்றும் இன்சிடென்ட் ரெஸ்பான்ஸ் போன்றவை கற்றுத்தரப்பட்டன.
மேலும் பர்ப் சூட், வயர்ஷார்க், என்மேப், நெசஸ் மற்றும் ஸ்பிளங்க் போன்ற தொழில்துறையில் பயன்படுத்தப்படும் முன்னணி சைபர் பாதுகாப்பு கருவிகளைக் கொண்டு வீரர்களுக்கு நேரடி நடைமுறை பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
இந்த அடிப்படைப் பயிற்சியில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் அடுத்தகட்ட உயர்நிலை பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுகின்றனர்.
செயற்கை நுண்ணறிவு
உயர்நிலை பயிற்சியில் செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு
தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் உயர்நிலைப் பயிற்சியில், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சார்ந்த செக்யூரிட்டி அனலிட்டிக்ஸ், செக்யூரிட்டி ஆட்டோமேஷன், மால்வேர் அனாலிசிஸ், டிஜிட்டல் ஃபோரன்சிக்ஸ் மற்றும் பெனிட்ரேஷன் டெஸ்டிங் போன்றவை கற்றுக்கொடுக்கப்படுகின்றன.
வீரர்களின் சான்றிதழை உறுதி செய்ய கோட்பாடு மற்றும் நடைமுறைத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
தற்போது வரை 140 ராணுவ வீரர்கள் இதில் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், இந்திய ராணுவத்துடனான இந்தத் தொழில்நுட்பக் கூட்டணி நாட்டின் சைபர் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் என்று ஐஐடி கான்பூர் தெரிவித்துள்ளது.