பிரதமரின் கண்களில் பயம் தெரிகிறது: செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி
குஜராத் நீதிமன்றம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 2 வருட சிறை தண்டனை விதித்ததை அடுத்து, அவர் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கப்பட்டார், இது குறித்து இன்று(மார் 25) செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதில் தனக்கு கவலையில்லை என்று கூறினார். மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்றத்தில் அதானி குறித்து ஒரே ஒரு கேள்வி மட்டுமே தான் கேட்டதாக கூறியுள்ளார். "ஒரே ஒரு கேள்வி தான் நான் கேட்டேன். அதானிக்கு உள்கட்டமைப்பு தொழில் உள்ளது. ஆனால் அவரிடம் இருக்கும் பணம் அவருடையது அல்ல." என்று ராகுல் காந்தி கூறி இருக்கிறார்.
ராகுல் காந்தி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
நாட்டில் ஜனநாயகம் தாக்கப்படுவதாக நான் பலமுறை கூறியுள்ளேன். அதற்கான உதாரணங்களை தினம் தினம் பார்த்து வருகிறோம். நாடாளுமன்றத்தில் நான் ஆற்றிய உரை நீக்கப்பட்டது. நான் வெளிநாட்டு சக்திகளிடம் உதவி கேட்டதாக சில அமைச்சர்கள் என்னைப் பற்றி புகார் சொன்னார்கள். ஆனால் நான் அப்படி எதுவும் செய்யவில்லை. நான் கேள்வி கேட்பதை நிறுத்த மாட்டேன், பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் இடையேயான உறவை பற்றி நான் தொடர்ந்து கேள்வி எழுப்புவேன். அதானியின் நிறுவனங்களுக்கு 20,000 கோடியை யார் அனுப்பியது என்ற கேள்வியிலிருந்து பிரதமரைக் காக்க நடத்தப்படும் நாடகம் தான் இது. இந்த அச்சுறுத்தல்கள், தகுதி நீக்கம் மற்றும் சிறைத் தண்டனைகளுக்கு நான் பயப்படவில்லை. எனக்கு உண்மையைத் தவிர வேறு எதிலும் ஆர்வம் இல்லை. என்று கூறியுள்ளார்.