தொடரும் மீட்பு பணிகள்: உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 40 பேரை தொடர்பு கொண்டது மீட்புக் குழு
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை மீட்கும் பணி நேற்று காலை முதல் பல்வேறு அமைப்புகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உத்தர்காசி மாவட்டத்தில் உள்ள பிரம்மகால்-யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் கட்டுமானப் பணி நடைபெற்று வந்த ஒரு சுரங்கப்பாதையின் ஒரு பகுதி நேற்று அதிகாலை 5 மணியளவில் இடிந்து விழுந்தது. இந்த விபத்தின் போது அங்கு வேலை செய்து கொண்டிருந்த 40 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். மீட்புப் பணிகளை தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) மற்றும் காவல்துறை இணைந்து மேற்கொண்டு வருகிறது.
இடிபாடுகளை அகற்றும் பணி தீவிரம்
சிக்கியுள்ள 40 தொழிலாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் அவர்களுக்கு குழாய் மூலம் ஆக்ஸிஜன் வழங்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். சிக்கிய தொழிலாளர்களுடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம்." என்று உத்தரகாசி வட்ட அதிகாரி பிரசாந்த் குமார் கூறியுள்ளார். சிக்கி இருக்கும் 40 பேரையும் தொடர்பு கொண்ட பிறகு, அவர்களுக்கு தண்ணீர் மற்றும் உணவுகள் உள்ளே அனுப்பப்பட்டு வருகிறது. சிக்கி இருப்பவர்களை மீட்க, மீட்பு குழு, கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி இடிபாடுகளை அகற்றி வருகிறது. இதுவரை 20 மீட்டர் ஸ்லாப் அகற்றப்பட்டுள்ளது. இன்னும் 35 மீட்டர் இடிபாடுகள் அகற்றப்பட வேண்டி இருக்கிறது. மேலும், தொழிலாளர்களை வெளியேற்ற 2-3 நாட்கள் ஆகலாம் என்று அதிகாரிகள் நேற்று தெரிவித்திருந்தனர்.