இந்தியாவின் UPI சேவையால் அசந்து போன ஜப்பான் அமைச்சர்
ஜப்பானிய டிஜிட்டல் அமைச்சர் கோனா தாரோ சமீபத்தில் இந்தியா வந்திருந்தார். அவர் டெல்லியின் கான் மார்க்கெட்டிற்கு சென்றிருந்த போது, ஆன்லைனில் பணம் செலுத்துவதற்காக மக்கள் QR குறியீடுகளை பயன்படுத்துவதை கண்டார். அது அவருக்கு பெரும் வியப்பாக இருந்திருக்கிறது. அதனையடுத்து, அவர் ஜப்பான் திரும்பியதும், UPI சேவையை ஜப்பானில் அறிமுகப்படுத்துவது குறித்து விவாதிக்க உயர்மட்டக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். ஏறக்குறைய 35-40 நாடுகள் ஏற்கனவே யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸை(UPI) பெறுவதற்காக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்நிலையில், ஜப்பானிய அமைச்சரின் டெல்லி பயணத்திற்கு பிறகு, ஜப்பானுக்கும் UPI மீது ஆர்வம் வந்துள்ளது.
UPI அமைப்பில் சேருவது குறித்து ஜப்பான் பரிசீலித்து வருகிறது
UPI அமைப்பில் சேருவது குறித்து பரிசீலித்து வருவதாக இந்த மாத தொடக்கத்தில் ஜப்பான் கூறி இருந்தது. பூட்டான், மலேசியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நேபாளம், பிரான்ஸ், இங்கிலாந்து, ரஷ்யா, ஓமன், கத்தார், ஆஸ்திரேலியா, தாய்லாந்து, சவுதி அரேபியா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா, தென் கொரியா ஆகிய நாடுகள் UPI டிஜிட்டல் பேமெண்ட் அமைப்பில் ஆர்வம் காட்டி வருகின்றன. 2022-23 ஆம் ஆண்டில் இந்தியா 71,564 மில்லியன் UPI பரிவர்த்தனைகளை பதிவு செய்திருந்தது. இந்த நிதியாண்டில் ஏற்கனவே 15,000 மில்லியனுக்கும் அதிகமான UPI பரிவர்த்தனைகள் பதிவாகி உள்ளன. கடந்த ஏப்ரல் மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.14,15, 504 கோடி மதிப்பிலான 8,863 மில்லியன் UPI பரிவர்த்தனைகள் பதிவாகி இருந்தது.