உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கி இருக்கும் 41 பேரை மீட்க 5 அடக்கு திட்டம் அறிமுகம்
கிட்டத்தட்ட 10 நாட்களாக உத்தரகாண்ட் சுரங்கபாதையில் சிக்கி இருக்கும் 41 தொழிலாளர்களை மீட்க 5 விருப்பங்கள் கொண்ட செயல் திட்டத்தை இறுதி செய்துள்ளதாக மத்திய அரசு நேற்று தெரிவித்தது. சிக்கிய தொழிலாளர்களை அணுகுவதற்கு மூன்று பக்கங்களிலிருந்தும் துளையிடப்பட இருக்கிறது என்றும், இந்த திட்டங்களை ஐந்து தனித்தனி ஏஜென்சிகள் கையாள இருக்கிறது என்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் செயலர் அனுராக் ஜெயின் கூறியுள்ளார். நிபுணர்களின் ஆலோசனையின் அடிப்படையில் ஒரு உயர்மட்டக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம்(ONGC), சட்லுஜ் ஜல் வித்யுத் நிகம்(SJVNL), ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட்(RVNL), தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகிய ஐந்து ஏஜென்சிகள் இந்த திட்டங்களை செயற்படுத்த இருக்கின்றன.
ஐந்து தனித்தனி ஏஜென்சிகள் கையாள இருக்கும் 5 திட்டங்கள்
1.சிக்கிய தொழிலாளர்களை மீட்பதற்காக சுரங்கப்பாதையின் உச்சியில் இருந்து செங்குத்தாக துளையிடப்பட இருக்கிறது. SJVNL இந்த நடவடிக்கையை மேற்கொள்ளும். 2.தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஒரு அவசரகால வெளியேற்ற பாதையை ஒரே நாளில் எல்லைச் சாலைகள் அமைப்பு கட்டி முடித்திருக்கும் நிலையில், அத்தியாவசியப் பொருட்களுக்கான மற்றொரு செங்குத்து குழாய் அமைக்கும் பணியை ரயில் விகாஸ் நிகாம் தொடங்கியுள்ளது. 3.ஆழமாக துளையிட தெரிந்த நிபுணர்களை கொண்ட ONGC, மற்றொரு முனையிலிருந்து செங்குத்தாக துளையிடும் பணியைத் தொடங்கியுள்ளது. 4.தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு அமைப்பு, பிரதான சில்க்யாரா வாயிலில் இருந்து தொடர்ந்து துளையிட உள்ளது. 5.டெஹ்ரி ஹைட்ரோ டெவலப்மென்ட் கார்ப்பரேஷன், மைக்ரோ துளையிடலில் வேலை செய்யும், இதற்காக கனரக இயந்திரங்கள் ஏற்கனவே வரவழைக்கப்பட்டுள்ளன.