Page Loader
ராம நவமி கலவரம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்: உள்துறை அமைச்சகம்
மேற்கு வங்கத்தில் கடைசியாக 2018ஆம் ஆண்டு ராம நவமி கொண்டாட்டத்தின் போது வகுப்புவாத கலவரங்கள் நடந்தன.

ராம நவமி கலவரம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்: உள்துறை அமைச்சகம்

எழுதியவர் Sindhuja SM
Apr 04, 2023
07:00 pm

செய்தி முன்னோட்டம்

ராம நவமி வன்முறை குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம், மேற்கு வங்காள அரசிடம் கேட்டு கொண்டதாக செய்திகள் கூறுகின்றன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸை தொடர்புகொண்டு நிலைமையை மதிப்பீடு செய்தாக கூறப்படுகிறது. ராம நவமி வன்முறையின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி மாநில பாஜக மனு தாக்கல் செய்ததை அடுத்து, கொல்கத்தா உயர் நீதிமன்றமும் வன்முறை குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட்டிருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை, ஹவுராவில் நடந்த ராம நவமி ஊர்வலத்தின் போது இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டதால், பல வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டு, கடைகள் சூறையாடப்பட்டன.

இந்தியா

பொது தேர்தல் நடப்பதற்கு முன் தொடர்ந்து நடைபெறும் ராம நவமி கலவரங்கள்

காவல்துறை மற்றும் கலகக் கட்டுப்பாட்டுப் படைகள் குவிக்கப்பட்ட போதிலும் மறுநாள் அந்தப் பகுதியில் மேலும் புதிய வன்முறைகள் வெடித்தன. ஒரு கும்பல் செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதால், வன்முறையை அடக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்த வேண்டியிருந்தது. அதன் பின், 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். நேற்றிரவு, ரிஷ்ராவில் லெவல் கிராசிங் அருகே ஒரு கும்பல் கல் வீசியதால் ரயில் சேவை சுமார் 3 மணி நேரம் நிறுத்தப்பட்டது. இந்த மோதல்கள் ஆளும் திரிணாமுல் காங்கிரஸுக்கும் எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே மிகப்பெரிய அரசியல் போரை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தில் கடைசியாக பொது தேர்தல் நடப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன், அதாவது 2018இல் ராம நவமி கொண்டாட்டத்தின் போது வகுப்புவாத கலவரங்கள் நடந்தன.