27 நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள், 3 ஆட்சிக் கவிழ்ப்பு; பாராளுமன்றத்தின் கடந்த கால வரலாறு
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு எதிராக 26 எதிர்க்கட்சிகள் கூட்டாக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மக்களவையில் முன்மொழிந்துள்ளன. நம்பிக்கையில்லா தீர்மானம் என்பது மக்களவையில் நடைமுறை மற்றும் நடத்தை விதிகளின் விதி 198ன் கீழ் மக்களவையில் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படும் முறையான முன்மொழிவு ஆகும். பிஆர்எஸ் எனும் அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் இதற்கு முன்பாக 27 முறை நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதில் 3 அரசுகள் கவிழ்க்கப்பட்டுள்ளன. மேலும், இந்திய வரலாற்றில் அதிகமுறை நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொண்டது இந்திரா காந்தி அரசு தான். அவரது அரசுக்கு எதிராக 15 முறை நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்தியாவின் முதல் நம்பிக்கையில்லாத் தீர்மானம்
சுதந்திர இந்தியாவில், முதல் நம்பிக்கையில்லாத் தீர்மானம் 1963இல் சீனப்போரை மோசமாக எதிர்கொண்ட ஜவஹர்லால் நேரு அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்டது. இதை கொண்டு வந்தது நேருவின் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆச்சாரியா கிருபாளிணிதான். இந்த தீர்மானத்தின் மீது நான்கு நாட்கள் சுமார் 20 மணி நேரம் நீடித்த விவாதத்திற்கு பிறகு, தீர்மானம் தோல்வியைத் தழுவியது. இந்திய வரலாற்றில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது அதிக நேரம் விவாதம் நடந்த சாதனையையும் இது கொண்டுள்ளது. மற்றொரு குறிப்பிடத்தக்க தீர்மானம் என்றால், 1999இல் அடல் பிகாரி வாஜ்பாய் தனது அரசுக்கு ஆதரவாக கொண்ட நம்பிக்கைத் தீர்மானத்தை குறிப்பிடலாம். அதிமுக தனது ஆதரவை வாபஸ் பெற்றதால், ஒரு வாக்கு வித்தியாசத்தில் பாஜக அப்போது ஆட்சியை இழந்தது.