ஞானவாபி மசூதியில் இந்துக்கள் பிரார்த்தனை தொடரும்: மனுவை நிராகரித்தது உயர்நீதிமன்றம்
ஞானவாபி மசூதியின் பாதாள அறையில் இந்து மத வழிபாடுகளை நடத்த அனுமதிக்கும் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. "வியாஸ் தெஹ்கானாவில் இந்து பிரார்த்தனைகள் தொடரும்" என்று கூறிய நீதிபதி ரோஹித் ரஞ்சன் அகர்வால் மசூதி குழுவின் மனுவை தள்ளுபடி செய்தார். தனது தாய்வழி தாத்தா சோம்நாத் வியாஸ் டிசம்பர் 1993 வரை அந்த பாதாள பிரார்த்தனை செய்தார் என்றும், அதனால் தன்னையும் அங்கு பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் ஷைலேந்திர குமார் பதக் என்பவர் மாவட்ட நீதிமன்றத்தில்மனு தாக்கல் செய்திருந்தார்.
மனுதாரரின் கருத்தை மறுத்த மசூதி நிர்வாகம்
அந்த மனுவை விசாரித்த வாரணாசி மாவட்ட நீதிமன்றம் , வியாஸ் தெஹ்கானா என்று அழைக்கப்படும் ஞானவாபி மசூதியின் தெற்கு பாதாள அறையில் இந்துக்கள் பூஜை செய்யலாம் என்று கடந்த மாதம் தீர்ப்பளித்தது. அந்த மசூதியின் அடித்தளத்தில் நான்கு பாதாள அறைகள் உள்ளன. அவற்றில் ஒன்று இப்போது வரை வியாஸ் குடும்பத்துக்கு சொந்தமானதாக உள்ளது. ஆனால், பாதாள அறையில் சிலைகள் எதுவும் இல்லாததால், 1993 வரை அங்கு பூஜைகள் நடத்தப்பட்டன என்ற கேள்விக்கே இடமில்லை என்று மனுதாரரின் கருத்தை மசூதி நிர்வாகம் மறுத்தது. அதோடு, வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, அலகாபாத் உயர்நீதிமன்றத்தை மசூதி நிர்வாகம் அணுகியதை தொடர்ந்து, தற்போது இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.