
இந்திய மக்களை ஒன்றிணைக்கும் இந்தி மொழி: உள்துறை அமைச்சர் அமித்ஷா
செய்தி முன்னோட்டம்
இந்தியா அரசியலமைப்பு சபையானது, இந்தி மொழியினை, 1949ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ம் தேதி மத்திய அரசின் அலுவல் மொழியாக்கியது.
அந்த நாளினை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் 14ம் தேதி இந்தி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது.
அதன்படி இந்தாண்டு கொண்டாடப்படும் இந்தி தினத்தினை முன்னிட்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டியளித்துள்ளார்.
அதில் அவர், "'இந்தி திவாஸ்' நாளினை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்தியா பல ஆண்டுகளாக பல்வேறு மொழிகள் பேசக்கூடிய நாடாக இருந்து வந்தாலும், ஜனநாயக மொழியாக இந்தி மொழி இருந்து வருகிறது" என்று கூறினார்.
இந்தி தினம்
இந்தி தினத்தினை முன்னிட்டு பிரதமர் மோடியின் வாழ்த்து பதிவு
அதனை தொடர்ந்து அவர், "பல மொழிகளுக்கு இடையே, இந்தி மொழி ஒற்றுமையினை ஏற்படுத்தும் மொழியாகவும் இருந்து வருகிறது" என்றும் கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், "சுதந்திர போராட்டம் நடந்த நாளிலிருந்து இன்று வரை, நமது நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் மொழியாக இந்தி மொழி இருந்து வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையில் இந்தி மொழியினை ஊக்குவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இதற்கான அகில இந்திய மாநாடு ஒன்று இந்தாண்டு புனேவில் நடக்கவுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே இந்தி தினத்தினை முன்னிட்டு பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், "நல்லெண்ணத்தின் இழை மற்றும் தேசிய ஒற்றுமையினை இந்தி மொழி வலுப்பெற செய்ய எனது வாழ்த்துக்கள்" என்று பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.