கிருஷ்ணகிரியில் 13 வயது பள்ளி மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த 3 ஆசிரியர்கள் கைது
செய்தி முன்னோட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகாவிலுள்ள கிராமம் ஒன்றிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், எட்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர், அவரது பள்ளியைச் சேர்ந்த மூன்று ஆசிரியர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறியதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் அப்பகுதியில் சீற்றத்தைத் தூண்டியுள்ளது. மாணவியின் உறவினர்கள் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், மூன்று குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்சோ) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விவரம்
வழக்கின் விவரம்
மாணவி, ஒரு மாதத்திற்கும் மேலாக பள்ளிக்கு வரவில்லை. இது குறித்து தலைமை ஆசிரியர் மாணவின் வீட்டிற்கு சென்று விசாரித்தபோது விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அதே பள்ளி ஆசிரியர்கள் ஆறுமுகம், சின்னசாமி, பிரகாஷ், ஆகியோர், தன்னை கூட்டு பலாத்காரம் செய்ததில் கர்ப்பமானதால், கருக்கலைப்பு செய்ததாக அந்த மாணவி தெரிவித்துள்ளார்.
இதை வெளியே கூறினால் அவப்பெயர் ஏற்படும் என மறைத்ததாக அவரது பெற்றோரும் கூறியுள்ளனர்.
உடனடியாக தலைமை ஆசிரியர் காவல் நிலையத்தில் புகார் அளித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தினார்.
தற்போது மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் குழு, குற்றம் சாட்டப்பட்ட மூன்று ஆசிரியர்களை கைது செய்துள்ளது,15 நாள் போலீஸ் காவலில் எடுத்துள்ளது.