
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமறைவு: முக்கிய இடங்களில் 144 தடை உத்தரவு
செய்தி முன்னோட்டம்
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமறைவானதாக கூறப்படும் நிலையில், அவரது வீடு மற்றும் ராஜ் பவனை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நில மோசடி வழக்கில் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்க இயக்குனரகத்தால்(ED) கைது செய்யப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. அதனால், அவர் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான ஆளும் அரசியல் கூட்டணியின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ராஞ்சியில் தங்கியிருக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
மாநிலத்தின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து விவாதிக்க செவ்வாயன்று நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்குமாறும் அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ஜார்க்கண்ட்
தற்போதைய அரசியல் சூழ்நிலையை விவாதிக்க செவ்வாய்க்கிழமை கூடும் கூட்டம்
ஜேஎம்எம், காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம்(ஆர்ஜேடி) ஆகிய காட்சிகள் அடங்கிய கூட்டணி ஜார்க்கண்டில் ஆட்சி செய்து வருகின்றன.
இந்நிலையில், தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு எதிரான நில மோசடி வழக்கு ஆகியவை குறித்து விவாதிக்க வரும் செய்வ்வாயன்று முதல்வர் இல்லத்தில் ஒரு கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த தகவலை பொதுச் செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான வினோத் குமார் சிங் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், சோரனின் அதிகாரப்பூர்வ இல்லம், ராஜ் பவன் மற்றும் ராஞ்சியில் உள்ள ED அலுவலகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .