
பலத்த மழை எதிரொலி - களக்காடு தலையணையில் குளிக்க 4வது நாளாக தடை
செய்தி முன்னோட்டம்
திருநெல்வேலி மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
அதன்படி அங்குள்ள ஊத்து பகுதியில் நேற்று(நவ.,20)காலை 8 மணி வரையிலான நிலவரப்படி அதிகபட்சமாக 92 மி.மீ.மழை பதிவாகியிருந்தது.
அதேபோல் மாஞ்சோலை பகுதியிலும், காக்காச்சி பகுதியிலும் 82 மி.மீ., மழை பதிவானது.
நாலுமுக்கு பகுதியில் 65 மி.மீ., மழை பதிவானது.
மேலும் அணை பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக 143 அடி நீர்மட்ட அளவு கொண்ட பாபநாசம் அணையில் நீர்மட்டம் 102.75 அடிக்கு இருந்தது.
தொடர்ந்து, அணைக்கு வினாடிக்கு 1,510 கன அடி நீர் வந்து கொண்டிருந்துள்ளது. 304 கன அடி நீர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டமும் 70.85 அடிக்கு உயர்ந்திருந்தது.
மழை
நம்பி கோயிலுக்கு செல்ல 2வது நாளாக தடை
தொடர்ந்து, மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 1,560 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. 35 கன அடி நீர் திறந்துவிடப்பட்டிருந்தது.
இதனிடையே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள களக்காடு தலையணையில் பலத்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்த காரணத்தினால் இன்றோடு(நவ.,21) தொடர்ந்து 4வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அங்கு அமைந்துள்ள பூங்காவை பார்வையிடவே சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல் திருக்குறுங்குடி நம்பியாற்றிலும் நீர் வரத்து அதிகரித்த காரணத்தினால் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் ஆற்றில் குளிக்கவும், வனப்பகுதியில் அமைந்துள்ள நம்பி கோயிலுக்கு செல்லவும் 2வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.