Page Loader
தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு கனமழை; அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு அதிரடி உத்தரவு
தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு கனமழை;

தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு கனமழை; அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு அதிரடி உத்தரவு

எழுதியவர் Sekar Chinnappan
Oct 11, 2024
12:26 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் அடிப்படையில், கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ், சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் எழுதி, அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார். கடிதத்தில், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கையாள வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மீட்பு பணிக்கான உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க, மாவட்ட அளவில் அனைத்து துறைகள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கனமழை

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் இன்று (அக்டோபர் 11) முதல் ஐந்து நாட்களுக்கு பின்வரும் பகுதிகளில் கனமழை அல்லது மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின் முழு விபரம் பின்வருமாறு:- 11.10.2024: திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 12.10.2024: நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வானிலை முன்னறிவிப்பு

அக்டோபர் 13-15 வரையிலான வானிலை முன்னறிவிப்பு

13.10.2024: தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது. 14.10.2024: திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. 15.10.2024: நீலகிரி, கோவை, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு, மீட்பு நடவடிக்கைகள், மற்றும் அவசர உதவிகளை எளிதாக்க, அனைத்து மாவட்ட நிர்வாகத்துக்கும் தேவையான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.