Loading...
பருவமழை தொடங்கியது முதல் இதுவரை இடி, மின்னல் தாக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர்
பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்

பருவமழை தொடங்கியது முதல் இதுவரை இடி, மின்னல் தாக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 26, 2026
03:08 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை, நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன்,"நீலகிரி, கொடைக்கானல் மற்றும் ஏற்காடு ஆகிய மலைப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகள் அங்குச் செல்ல முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது". "நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த ஓட்டுநரின் குடும்பத்தினருக்கு ரூ. 4 லட்சம் நிவாரண நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. பருவமழை தொடங்கியது முதல் இதுவரை இடி, மின்னல் தாக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர்" என்றார்.

சீரமைப்புப் பணிகள்

விரைவான சீரமைப்புப் பணிகள்

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பிரதான சாலைகளில் தேங்கிய மழைநீர் நான்கு மணி நேரத்திற்குள்ளாகவே அப்புறப்படுத்தப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை உடனடியாகத் திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளத் தமிழ்நாடு அரசு தயார் நிலையில் உள்ளது என்றும், தண்ணீர் தேங்கும் பகுதிகளை உடனடியாக கண்டறிந்து அகற்றும் பணிகள் தொடர்வதாகவும் அமைச்சர் உறுதி அளித்தார்.

ADVERTISEMENT