இந்தியாவை மிரட்டும் வெப்ப அலை: தெலுங்கானா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்பு
தெலுங்கானா, கேரளா, ஒடிசா, ஜார்கண்ட், விதர்பா பகுதி மகாராஷ்டிரா, கங்கை மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் உள்ள பல மாநிலங்களில் நேற்று கடுமையான வெப்பம் இருந்தது. வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்தது. எனினும், இந்த வாரம் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் தென் மாநிலங்களின் சில பகுதிகளுக்கு எரியும் வெயிலில் இருந்து ஓரளவு நிவாரணம் கிடைக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது. "ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், வடகிழக்கு இந்தியாவில் மிதமான இடியுடன் கூடிய மழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்யும் என்று எதிர்பார்க்கிறோம்."என்று வானிலை பணியகத்தின் இயக்குனர் ஜெனரல் எம் மொஹபத்ரா கூறியுள்ளார்.
இடியுடன் கூடிய மழை பெய்யும்
"இனி வடகிழக்கு மற்றும் தென்னிந்தியாவில் கடுமையான வெப்பம் குறையும். ஐந்து நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்." என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேற்கு வங்காளம், தமிழ்நாடு, ஒடிசா மற்றும் ஜார்கண்ட் ஆகிய பகுதிகளில் கடுமையான வெப்ப அலை நிலைகள் நிலவுவதாகவும், அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 4-7 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த சில நாட்களாக 42 முதல் 44 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவானதால், செவ்வாய்க்கிழமை மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறும் பெரும்பாலான கர்நாடக மாவட்டங்களில் வெப்ப அலைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.