மதுரை எய்ம்ஸ்: நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்
ஆசிரியர், உள்கட்டமைப்பு மற்றும் நோயாளிகள் இல்லாத மருத்துவக் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்ததால், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களைத் பரப்புவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மக்களவையில் குற்றம்சாட்டினார். இதனால், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மதுரை எய்ம்ஸ் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த அவர், உள்கட்டமைப்பைக் கட்டுவதற்கு ரூ.1,900 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவப் படிப்புகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தயாராக இல்லை என்று திமுக உறுப்பினர்கள் கூறியபோது, அந்த கட்சிகள் தவறான தகவல்களை அவையில் பரப்பி மக்களை தவறாக வழிநடத்துவதாக மாண்டவியா குற்றம் சாட்டினார்.
திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு
"சிலர் எல்லாவற்றிலும் அரசியல் செய்ய விரும்புகிறார்கள். ஆசிரியர்கள், உள்கட்டமைப்பு மற்றும் நோயாளிகள் இல்லாத மருத்துவக் கல்லூரிகள் மீது நான் கடுமையான நடவடிக்கை எடுத்ததாலேயே அவர்கள் இப்படி செய்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்." என்று அவர் கூறினார். ஆளும் பாஜகவின் சில உறுப்பினர்களும் மாண்டவியாவுக்கு ஆதரவாக தங்கள் இருக்கைகளில் நின்று குரல் எழுப்பினர். "இவர் யார் இப்படிப் பேச" என்று திமுகவின் தயாநிதி மாறன் ஆவேசமடைந்தார். "எங்களை இவர் மிரட்டுகிறார்'' என்று அவர் குற்றம்சாட்டினார். சிறிது நேரம் அமளி நீடித்ததால், சபாநாயகர் ஓம் பிர்லா, எதிர்க்கட்சி உறுப்பினர்களை அமைதிப்படுத்த முயன்றார். இதனால் அதிருப்தி அடைந்த திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.