நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிடவிருக்கும் HCL
டிசிஎஸ் மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனங்களைத் தொடர்ந்து ஹெச்.சி.எல் நிறுவனம் நாளை தங்களது நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிடவிருக்கிறது. மற்ற இரண்டு தொழில்நுட்ப நிறுவனங்களும் சந்தை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததையடுத்து, ஹெச்.சி.எல் நிறுவனத்தின் முடிவுகளும் கிட்டத்தட்ட அதே போலவே இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதன் நிகர லாபம் முந்தைய காலாண்டு மற்றும் முந்தைய நிதியாண்டின் கடைசி காலாண்டை விட அதிகமாக இரண்டு இலக்கங்களில் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நடப்பு நிதியாண்டிற்கான இடைக்கால டிவிடெண்ட் குறித்த அறிவிப்பையும் ஹெச்.சி.எல் நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கின்றனர் முதலீட்டாளர்கள்.
பங்குச்சந்தையில் எதிர்பார்ப்பு:
நேற்று அந்நிறுவனப் பங்குகள் 1.99% உயர்ந்திருந்த நிலையில், இன்று நான்காம் காலாண்டு முடிவுகள் வெளியாவதைத் தொடர்ந்து 2%-கும் மேல் சரிவைச் சந்தித்திருக்கின்றன. கடந்த நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் ஒட்டுமொத்த நிகர லாபம் 19% (YoY) உயர்ந்திருப்பதாகவும், வருவாய் 19.5% (YoY) உயர்ந்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தது அந்நிறுவனம். நான்காம் காலாண்டிலும் கிட்டத்தட்ட மேற்கூறிய அளவை ஒத்தே லாபமும், வருவாய் வளர்ச்சியும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரம் இன்ஃபோசிஸ் நிறுவனம் தங்களது நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து மூன்றாம் வர்த்தக நாளான இன்றும் அந்நிறுவனத்தின் பங்குகள் சரிவையே (1.94%) சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.