சிறந்த காலாண்டு முடிவுகளை பதிவு செய்த HCL
டிசிஎஸ் மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனங்களைத் தொடர்ந்து நேற்று தங்களது நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது ஹெச்.சி.எல் (HCL) நிறுவனம். மற்ற தொழில்நுட்ப நிறுவனங்களைப் போல சந்தை எதிர்பார்ப்புகளை ஹெச்.சி.எல் நிறுவனமும் பூர்த்தி செய்யாது என்ற கருத்தே நிலவி வந்த நிலையில், அதனைப் பூர்த்தி செய்யும் வகையில் முடிவுகள் வெளியாகியிருக்கிறது. நான்காம் காலாண்டில் 3,983 கோடி ரூபாய் நிகர லாபத்தைப் பதிவு செய்திருக்கிறது ஹெச்.சி.எல். நிறுவனம். இது முந்தைய நிதியாண்டின் நான்காம் காலாண்டை விட 10.85% அதிகம். ஆனால், கடந்த நிதியாண்டின் மூன்றாம் காலாண்டை விட 2.8% குறைவு. அதேபோல், நான்காம் 26,606 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியிருக்கிறது ஹெச்.சி.எல். இது முந்தைய நிதியாண்டின் நான்காம் காலாண்டை விட 17.74% அதிகம்.
பங்குசந்தை எதிரொலி:
அந்நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாயும் (EBIT) முந்தைய நிதியாண்டின் கடைசி காலாண்டை விட 18.8% அதிகமாக 4,836 கோடி ரூபாயைப் பதிவு செய்திருக்கிறது ஹெச்.சி.எல். நிறுவனம். மேலும், முதலீட்டாளர்களுக்கான நற்செய்தியாக, நடப்பு நிதியாண்டில் ரூ.18-ஐ இடைக்கால டிவிடெண்டாக அறிவித்திருக்கிறது அந்நிறுவனம். காலாண்டு முடிவுகளை முன்னிட்டு நேற்று கொஞ்சம் ஏற்ற இறக்கத்துடனே வர்த்தகமாயின் அந்நிறுவன பங்குகள். நல்ல காலாண்டு முடிவுகள் மற்றும் முதலீட்டாளர்களுக்கான டிவிடெண்ட் ஆகியவை எல்லாம் சேர்த்து, இன்று காலை வர்த்தகத்தை 1.7% அதிகமாக கேப்அப்பிலேயே தொடங்கியிருக்கின்றன. காலை 9.24 நிலவரப்படி ரூ.1,055-ல் வர்த்தகமாகி வருகின்றன அந்நிறுவனப் பங்குகள்.