டிஜிட்டல் ஆதாரங்கள் சேகரிப்பதற்கான விதிகள் வகுக்க 4 வார கால அவகாசம் - உயர்நீதிமன்றம்
செய்தி முன்னோட்டம்
அண்மையில் ஒரு கொலை வழக்கின் தண்டனையினை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடந்தது.
அப்போது தீவிர குற்றவழக்குகளின் விசாரணை தரத்தினை மேம்படுத்த அதற்கென தனி சிறப்பு பிரிவினை ஏன் அமைக்கக்கூடாது என்று தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.
அதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை மீண்டும் ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் எம்.எஸ்.ரமேஷ் என்னும் நீதிபதிகள் முன்பு இன்று(ஜூன்.,23)விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக டிஜிபி சார்பில் ஓர் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையில், தமிழகத்தில் உள்ள 11 தாலுக்காவில் தீவிர குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளது என்றும், இந்த தீவிர குற்ற வழக்குகளில் இறுதி அறிக்கையானது சரியான நேரத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டிருந்தது.
உத்தரவு
தகுந்த விதிகளை வகுப்பது என்பது முக்கியமான பணி என்பதால் அதில் அவசரம் வேண்டாம் - நீதிபதிகள்
மேலும், இதனை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளும் தற்போது எடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதே போல், டிஜிட்டல் ஆதாரங்கள் சேகரிக்க தகுந்த விதிகளை வகுக்கும் பணியானது கடைசி கட்டத்தில் உள்ளது என்றும், அதனை முழுமையாக வகுத்து முடிக்க 2 வார கால அவகாசம் வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து, சிறப்பு பிரிவுக்களுக்கென தனி காவல் நிலையங்களை அமைக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், டிஜிட்டல் ஆதாரங்கள் சேகரிக்க தகுந்த விதிகளை வகுப்பது என்பது முக்கியமான பணி என்பதால் அதில் அவசரம் வேண்டாம் என்று தெரிவித்தனர்.
தொடர்ந்து, 2 வார கால அவகாசம் கோரப்பட்டிருந்ததையடுத்து, 4 வார கால அவகாசம் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.