வெள்ள பாதிப்பு: முதல்வர் ஸ்டாலினை தொடர்பு கொண்டு பேசினார் பிரதமர் மோடி
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு தொடர்பாக பிரதமர் மோடி தன்னிடம் தொலைபேசியில் பேசியதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், மத்திய அரசிடம் இருந்து உடனடியாக நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்த முதல்வர் ஸ்டாலின், "மிக்ஜாம் புயல் தாக்கியதால் தென் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளம் குறித்து விசாரிக்க பிரதமர் மோடி என்னை தொடர்பு கொண்டார்" என்று கூறியுள்ளார். கடந்த வாரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அதிக கனமழை பெய்ததால், அம்மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்ட்டுள்ளன. அந்த வெள்ளத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு கோரி வரும் நிலையில், பிரதமர் மோடி தமிழக முதல்வரிடம் பேசியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
"மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி மிக்ஜாம் புயலுக்கு பிறகு, தென் தமிழகத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளம் குறித்து விசாரிக்க என்னை தொடர்பு கொண்டார் . வளக் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், மாநில அரசு மேற்கொண்ட பெரிய மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை அவருக்கு விளக்கி, மத்திய அரசிடம் இருந்து உடனடி நிதி உதவியை நாடினேன். இந்த இரட்டை பேரிடர்களை சமாளிக்க மத்திய அரசு ஆதரவளிக்கும் என்று மாண்புமிகு பிரதமர் உறுதியளித்ததோடு, வெள்ள நிலைமையை மதிப்பிடுவதற்கு மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமனை பிரதமர் நியமித்துள்ளார்." என்று முதல்வர் ஸ்டாலின் ட்விட்டரில் கூறியுள்ளார்.