டெலிவரி ஏஜெண்டுகள் இளைப்பாறுவதற்கு பந்தல் அமைத்த இளைஞர்: குவியும் பாராட்டுகள்
மும்பை: டெலிவரி ஏஜெண்டுகளின் சோர்வை போக்கும் வகையில் ஒரு இளைஞர் புதிதாக அமைத்திருக்கும் இளைப்பாறும் பந்தலுக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மழைக்காலத்தில் வெளியே பயணிப்பது என்றாலே பல அசௌகர்யங்கள் இருக்கும். அதிலும், எப்போதும் டெலிவரிக்காக அங்கும் இங்கும் அலைபவர்களின் பாடு பெரும்பாடு தான். இந்நிலையில், டெலிவரி செய்பவர்கள் அமைதியாக ஓய்வு பெறுவதற்கும், சிற்றுண்டிகள் உண்பதற்கும் ஒரு குட்டி ஸ்டேஷனை உருவாக்கி இருக்கிறார் மும்பையை சேர்ந்த இன்ஸ்டாகிராம் இன்ப்ளூயன்சர் சித்தேஷ் லோகரே. இவர் மும்பையின் ரோட்டடியில் அமைத்திருக்கும் குட்டி ரிலாக்ஸ் ஸ்டேஷனில், ரெயின் கோட்டுகள், காபி,டீ, சமோசா போன்ற பொருட்கள் டெலிவரி ஏஜெண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. டெலிவரி செய்பவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் சித்தேஷ் செய்திருக்கும் இந்த செயலுக்கு, இணையவாசிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.