மதக் கலவரம் நடந்த ஹரியானா பகுதியில் இன்று மீண்டும் இந்து மத யாத்திரை
சில வாரங்களுக்கு முன்பு மத கலவரம் நடந்த ஹரியானாவின் நூஹ் பகுதியில், இன்று மீண்டும் ஷோபா மத யாத்திரையை நடத்த இந்து அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளதால், அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எனினும், இந்த ஊர்வலம் நடத்துவதற்கு அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஹரியானாவின் நூஹ் மாவட்டத்தில் கடந்த ஜூலை 31ஆம் தேதி விஷ்வ ஹிந்து பரிஷத்(VHP) நடத்திய ஊர்வலத்தை ஒரு கும்பல் தடுக்க முயன்றதால், மத கலவரம் வெடித்தது. மூன்று நான்கு நாட்கள் தொடர்ந்து நடந்த இந்த கலவரங்களில் 6 பேர் கொல்லப்பட்டனர், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில், ஆகஸ்ட் 28ஆம் தேதி(இன்று) மீண்டும் ஒரு யாத்திரையை நடத்த கடந்த வாரம் சர்வ் ஜாதியா இந்து மகாபஞ்சாயத் அழைப்பு விடுத்தது.
ஹரியானாவில் கடுமையான பாதுகாப்பு
இந்த ஊர்வலம் இன்று நடத்தப்படும் என்று கூறியுள்ள விஷ்வ ஹிந்து பரிஷத்(VHP) அமைப்பு, இது போன்ற மத நிகழ்வுகளுக்கு அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை என்று உறுதிபடக் கூறியுள்ளது. ஆனால், இந்த யாத்திரைக்கு அனுமதி அளிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இதனையடுத்து, ஹரியானாவில் போலீஸ் குழுக்கள் மற்றும் 30 துணை ராணுவப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், மாநிலங்களுக்கு இடையேயான மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான எல்லைகளில் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது. யாத்திரைக்கு VHP அழைப்பு விடுத்திருப்பதைக் கருத்தில் கொண்டு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நூஹ் மாவட்ட நிர்வாகம் இன்று கல்வி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளை மூட உத்தரவிட்டுள்ளது. மேலும், மொபைல் இன்டர்நெட் மற்றும் மொத்த எஸ்எம்எஸ் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.