அரையாண்டு தேர்வு, விடுமுறை எப்போது? பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு
விஜயதசமி தினத்தை முன்னிட்டு இன்று (அக்டோபர் 12) தமிழக அரசு தொடக்கப் பள்ளிகள் அனைத்தும் திறந்திருக்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு வாய்ப்பைப் பயன்படுத்தி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சேர்த்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வழக்கமாக அரசு தொடக்கப் பள்ளிகளில் கல்வியாண்டின் தொடக்கமான மே மற்றும் ஜூன் மாதங்களில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெறும். ஆனால், தனியார் பள்ளிகளில் விஜயதசமி அன்றும் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் நிலையில், அரசு பள்ளிகளிலும் இதை பின்பற்றி, இந்த ஆண்டு விஜயதசமி தினத்தை முன்னிட்டு மாணவர் சேர்க்கைக்கு ஏற்பாடு செய்துள்ளன.
மாணவர் சேர்க்கைக்காக பணிக்குத் திரும்பும் ஆசிரியர்கள்
ஆயுதபூஜை, விஜயதசமி மற்றும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு மூன்று நாட்கள் விடுமுறை இருந்தாலும், மாணவர் சேர்க்கை நடவடிக்கைகளுக்காக சில ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் இன்று பணியில் இருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, நடப்பு கல்வியாண்டிற்கான அரையாண்டு தேர்வுகள் பற்றிய தகவல்களும் வெளியாகியுள்ளன. இதன்படி, அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் 16ஆம் தேதி முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்பின், டிசம்பர் 24 முதல் ஜனவரி 1 வரை 9 நாட்கள் மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்படும். அதைத் தொடர்ந்து மூன்றாம் பருவம் ஜனவரி 2ஆம் தேதி தொடங்கும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.