இந்தியாவிற்கு புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் தேர்வு; யார் அந்த ஞானேஷ் குமார்?
செய்தி முன்னோட்டம்
மே 2022 முதல் இந்தியாவின் தலைமை தேர்தல் அதிகாரியாக பதவி வகித்து வரும் ராஜீவ் குமார் பதவி ஓய்வு பெறவுள்ள நிலையில், ஞானேஷ் குமார் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
1988-வது தொகுதி கேரள கேடர் ஐஏஎஸ் அதிகாரியான ஞானேஷ் குமார், கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தேர்தல் ஆணையராகப் பணியாற்றி வருகிறார்.
தலைமை நீதிபதிக்குப் பதிலாக, உள்துறை அமைச்சரை தேர்வுக் குழுவில் நியமித்த தேர்தல் ஆணையர்களைத் தேர்ந்தெடுப்பதை நிர்வகிக்கும் புதிய சட்டத்தின் கீழ், அவரது நியமனம் முதல் முறையாகும்.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அடங்கிய தேர்வுக் குழு, ஞானேஷ் குமாரை இறுதி செய்து பரிந்துரைத்தது.
பதவிக்காலம்
புதிய தேர்தல் அதிகாரியின் பதவிக்காலம்
அடுத்த பொதுத் தேர்தல்களுக்கான தேதிகள் அறிவிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, அதாவது ஜனவரி 26, 2029 வரை ஞானேஷ் குமார் தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியில் இருப்பார்.
இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள பீகார் சட்டமன்றத் தேர்தல்களையும், 2026இல் கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்களையும் அவர் மேற்பார்வையிடுவார்.
விவரங்கள்
ஞானேஷ் குமாரின் பணி விவரங்கள்
தேர்தல் ஆணையத்தில் சேருவதற்கு முன்பு, ஞானேஷ் குமார் அரசாங்கத்திற்குள் பல முக்கிய பதவிகளை வகித்தார்.
அவர் பாதுகாப்பு அமைச்சகத்தில் இணைச் செயலாளராகவும், உள்துறை அமைச்சகத்தில் கூடுதல் செயலாளராகவும் பணியாற்றினார்.
நாடாளுமன்ற விவகார அமைச்சகம் மற்றும் கூட்டுறவு அமைச்சகம் இரண்டிலும் அவர் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
குறிப்பாக, மத்திய உள்துறை அமைச்சகத்தில் அவர் பணியாற்றிய காலத்தில், ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டது, அதனைத்தொடர்ந்து முடிவுகளை செயல்படுத்துவதில் அவர் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தார்.
தொடக்ககாலத்தில் ஞானேஷ் குமார் எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர், கொச்சி நகராட்சி ஆணையர் மற்றும் கேரள மாநில கூட்டுறவு வங்கியின் நிர்வாக இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார்.