குடியாத்தம் மோர்தானா அணையை சுற்றுலா தலமாக்க நடவடிக்கை; அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு
குடியாத்தத்தில் உள்ள மோர்தானா அணையை சுற்றுலா தலமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் நீர்வளத்துறை அமைச்சரும், காட்பாடி சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏவுமான துரைமுருகன் தலைமையில், அவரது தொகுதிக்கு உட்பட்ட வேலூர் மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், மேயர், துணை மேயர் மற்றும் 17 மாமன்ற வார்டுகளின் உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் காட்பாடி தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்திற்கு பின் அமைச்சர் துரைமுருகன் பேட்டி
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், குடியாத்தம் மோர்தானா அணையை சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். முன்னதாக, சில தினங்களுக்கு முன்பு இந்த அணையை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி, தமிழக அரசின் நீர்வளத்துறை மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து இதை சுற்றுலா தலமாக்க விரைவில் நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, செய்தியாளர்கள் துணை முதல்வர் பதவி குறித்து கேள்வியெழுப்பியதற்கு, முதல்வர் தனது ஆளுகைக்கு உட்பட்டு, நிர்வாகத்தில் தேவையான நேரத்தில் எதை செய்ய வேண்டுமோ அதை செய்வார் எனக் கூறினார்.