Loading...
தாத்தாவின் சொத்தில் தந்தைக்கு கிடைத்த பங்கில் பேரனுக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
பிறப்பின் அடிப்படையில் பங்கு கேட்க பேரனுக்கு எந்த உரிமையும் இல்லை

தாத்தாவின் சொத்தில் தந்தைக்கு கிடைத்த பங்கில் பேரனுக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Nov 12, 2026
08:14 am

செய்தி முன்னோட்டம்

தாத்தாவின் சொத்தை பாகப் பிரிவினை செய்யும்போது தந்தைக்கு கிடைக்கும் சொத்தில், பிறப்பின் அடிப்படையில் பங்கு கேட்க பேரனுக்கு எந்த உரிமையும் இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த ஒரு குடும்பச் சொத்து வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. தமிழகத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான சொத்தில், அவரது மகன் என்.குமரனுக்கு பாகப் பிரிவினை மூலம் நிலம் ஒதுக்கப்பட்டது. பின்னர், தனக்கு கிடைத்த அந்த நிலத்தை என். குமரன் விற்பனை செய்தார். விற்பனை செய்யப்பட்ட அந்த நிலம் தனது தாத்தாவின் குடும்பச்சொத்து என்றும், எனவே தந்தைக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் பாதியை தனக்கு பங்கு வழங்க வேண்டும் என்றும் கோரி குமரனின் மகன் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

விளக்கம்

உச்சநீதிமன்ற நீதிபதிகள் அளித்த முக்கிய விளக்கம்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, ஹிந்து வாரிசுரிமைச் சட்டத்தின் பிரிவுகளை சுட்டிக்காட்டி, தாத்தா ராமகிருஷ்ணனின் மறைவுக்குப் பிறகு, அவரது சொத்துக்கள் அவரது நேரடி வாரிசுகளைச் சென்றடைந்தன. இவ்வாறு பாகப் பிரிவினை செய்யப்பட்ட பிறகு, ஒவ்வொரு வாரிசுக்கும் ஒதுக்கப்பட்ட சொத்து அவரவருக்கே முழுமையாக சொந்தமானதாக மாறிவிடும்.

இந்த வழக்கில் ஹிந்து வாரிசுரிமைச் சட்டம் 1956-இன் 6-ஆவது பிரிவோ அல்லது ஹிந்து வாரிசுரிமை தமிழ்நாடு திருத்தச் சட்டம் 1989 மூலம் சேர்க்கப்பட்ட பிரிவோ பொருந்தாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஆகவே, ஹிந்து வாரிசுரிமைச் சட்டம் 8-ஆவது பிரிவின் கீழ் தந்தைக்கு கிடைத்த சொத்தில், பிறப்பின் அடிப்படையில் பங்கு கோர பேரனுக்கு எந்தவொரு சட்டப்பூர்வ உரிமையும் இல்லை என்று கூறி உச்சநீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.

ADVERTISEMENT