ஜம்மு-காஷ்மீரில் 14 மொபைல் மெசஞ்சர் ஆப்களுக்கு தடை
பாதுகாப்புப் படைகள், உளவுத்துறை மற்றும் புலனாய்வு அமைப்புகளின் பரிந்துரையின் பேரில், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத குழுக்களால் பயன்படுத்தப்பட்டு வந்த 14 மெசஞ்சர் மொபைல் ஆப்களை மத்திய அரசு முடக்கியுள்ளது. தடைசெய்யப்பட்ட ஆப்களில் கிரிப்வைசர், எனிக்மா, சேஃப்ஸ்விஸ், விக்ர்மீ, மீடியாஃபயர், பிரையர், பிசாட், நண்ட்பாக்ஸ், கோனியன், ஐஎம்ஓ, எலமென்ட், செகண்ட் லைன், ஜாங்கி, த்ரீமா உள்ளிட்டவை அடங்கும். காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகள் தங்கள் ஆதரவாளர்கள் மற்றும் தரைப் பணியாளர்களுடன்(OGW) தொடர்புகொள்வதற்கு இந்த ஆப்களைப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆப்களுக்கு இந்தியாவில் அலுவலகங்கள் இல்லை என்பதையும், இந்தியச் சட்டங்களால் கட்டாயப்படுத்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு கூட அவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்பதையும் அரசாங்கம் கண்டறிந்தது.
தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் 14 ஆப்கள் தடை செய்யப்பட்டன
இந்த ஆப்ஸ்களில் பெரும்பாலானவை பயனர்களின் பெயர் வெளியே தெரியாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதனால், யார் யாருக்கு மெசேஜ் அனுப்புகிறார்கள் என்பதை கண்டுபிடிப்பது கடினம். இந்த ஆப்களின் சர்வர்கள் வெவ்வேறு நாடுகளில் இருப்பதால், இவை ஒரு VPN போல் அவர்களுக்கு செயல்பட்டு கொண்டிருந்தது. இந்த மொபைல் ஆப்கள், பயங்கரவாதிகளுக்கும் அவர்களின் துணை அமைப்புகளுக்கும் உதவுவதை உள்துறை அமைச்சகம் கண்டறிந்தது. அதனையடுத்து, தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000த்தின் பிரிவு 69Aஇன் கீழ் இந்த ஆப்கள் தடை செய்யப்பட்டுள்ளன. மேலும், கடந்த சில ஆண்டுகளாக, ஜம்மு காஷ்மீரில் இருக்கும் பயங்கரவாதிகளின் தகவல் தொடர்பு வலையமைப்பை அழிக்க அரசு முயற்சித்து வருகிறது.