அதிக வட்டி விகிதத்தைக் கொண்ட அரசின் சேமிப்புத் திட்டங்கள்!
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் தங்களின் பணத்தை சேமிப்பதற்காகத் தேர்தெடுக்கும் ஒரு திட்டம் நிலையான வைப்பு நிதி திட்டம் தான். இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அதிக வட்டிவிகிதம் தான் மக்களை இந்தத் திட்டத்தை நோக்கி ஈர்க்கிறது. ஆனால், வங்கிகளின் நிலையான வைப்புநிதி திட்டங்களை விட கூடுதல் வட்டி தரக்கூடிய சேமிப்புத் திட்டங்களை இந்திய அரசு வழங்கி வருகிறது. அப்படியான திட்டங்களைப் பற்றிப் பார்க்கலாம். 'கிஸான் விகாஸ் பத்ரா' என்ற முதலீட்டுத் திட்டத்தை மக்களுக்காக வழங்கி வருகிறது இந்திய அரசு. இந்த திட்டத்தின் கீழ் நாம் முதலீடு செய்யும் பணத்திற்கு 7.5% வட்டி வழங்கப்படுகிறது. முதிர்வடையும் போது நம்முடைய முதலீடு இரட்டியாக நமக்குக் கொடுக்கப்படுகிறது. குறைந்தபட்ச முதிர்வு காலம் 115 மாதங்கள்.
மக்கள் பலனடையும் வகையிலான அரசு சேமிப்புத் திட்டங்கள்:
'தேசிய சேமிப்பு சான்றிதழ்' திட்டத்தை அஞ்சல் அலுவலகள் மூலமாக வழங்கி வருகிறது இந்திய அரசு. இந்தத் திட்டத்தின் கீழ் நாம் முதலீடு செய்யும் பணத்திற்கு லாக்-இன் காலம் 5 ஆண்டுகளாகவும், வட்டிவிகிதம் 7.7%-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. 'சுகன்யா ஸ்மிரிதி யோஜனா' திட்டத்தை பெண் குழந்தைகளுக்காக வழங்கி வருகிறது இந்திய அரசு. இந்தத் திட்டத்தின் கீழ் நாம் சேமிக்கும் பணத்திற்கு 8% வட்டி வழங்கப்படுகிறது. மேலும் 80C-யின் கீழ் வரிசலுகையும் உண்டு. 'பொது வருங்கால வைப்பு நிதி' திட்டத்தை அனைத்து இந்திய மக்களுக்காகவும் வழங்கி வருகிறது இந்திய அரசு. 7.1% வட்டி வழங்கப்படும் இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் பணத்திற்கும், அதன் வட்டிக்கும் வரி எதுவும் இல்லை. ஆனால், குறைந்தபட்ச காலம் 15 ஆண்டுகள்.