
ஒடிசாவில் மீண்டும் ஒரு ரயில் தடம் புரண்டது
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் ஒரு மிகப்பெரும் ரயில் விபத்து நடந்து மூன்று நாட்கள் மட்டுமே ஆகி இருக்கும் நிலையில், ஒடிசாவில் மீண்டும் ஒரு ரயில் தடம் புரண்டுள்ளது.
அண்மையில் விபத்துக்குள்ளான இடத்திலிருந்து 500 கிமீ தொலைவில், மேற்கு ஒடிசாவின் பர்கர் பகுதியில் சுண்ணாம்புக் கற்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் ஒன்று தண்டவாளத்தை விட்டு விலகியது.
தனியார் சிமென்ட் தொழிற்சாலையால் இயக்கப்படும் சரக்கு ரயிலின் சில வேகன்கள் பர்கர் மாவட்டத்தின் மெந்தபாலி அருகே தொழிற்சாலை வளாகத்திற்குள் தடம் புரண்டதாகவும், "இந்த விஷயத்தில் ரயில்வேயின் பங்கு எதுவும் இல்லை" என்றும் கிழக்கு கடற்கரை ரயில்வே தெரிவித்துள்ளது.
details
இதுவரை உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை
துங்ரி சுண்ணாம்பு சுரங்கங்களுக்கும் பர்கரில் உள்ள ஏசிசி சிமென்ட் ஆலைக்கும் இடையே ஒரு குறுகிய தனியார் ரயில் பாதை உள்ளது.
இந்த பாதையில் இயக்கப்படும் ரயில்கள் மற்றும் ரயில் பெட்டிகள் அனைத்தும் தனியாருக்கு சொந்தமானது. இந்திய ரயில்வே அமைப்புடன் எந்த வகையிலும் இவை இணைக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ரயில் தடம் புரண்டதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. மேலும் சில பெட்டிகள் மட்டுமே தடம் புரண்டதாக கூறப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு, ஒடிசாவின் பாலசோரில் மூன்று ரயில்களால் ஏற்பட்ட விபத்தில் 275 பேர் கொல்லப்பட்டனர்.
இருபது வருடங்களுக்கு பிறகு இந்தியாவில் ஏற்படும் மிகப்பெரும் ரயில் விபத்து இதுவாகும்.