கோவா சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல்: முதல்வர் சாவந்த் என்ன சொல்கிறார்
கோவாவின் அஞ்சுனா பகுதியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் நேற்று(மார் 12) சுற்றுலா பயணிகள் வாள்கள் மற்றும் கத்திகளால் தாக்கப்பட்டு, படுகாயமடைந்ததை அடுத்து, "குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் உறுதியளித்துள்ளார். ஸ்பேசியோ லீஷர் ரிசார்ட்டில் ஒரு குழுவைத் தாக்கியதற்காக இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். "இன்று அஞ்சுனாவில் நடந்த வன்முறை சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். இதுபோன்ற சமூக விரோதிகள் மாநிலத்தில் உள்ள மக்களின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளனர். மேலும் அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்று முதல்வர் சாவந்த் ட்வீட் செய்துள்ளார்.
புகார் அளித்ததால் தொடங்கிய பிரச்சனை
பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான ஜதின் ஷர்மா, அதிர்ச்சியூட்டும் சம்பவத்தின் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அஞ்சுனாவில் உள்ள ஹோட்டலுக்கு வெளியே ராய்ஸ்டன் டயஸ், நைரோன் டயஸ் மற்றும் காஷிநாத் அகர்வடேகர் ஆகியோர் தன்னையும் தனது குடும்பத்தினரையும் ஆயுதங்களால் தாக்கியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். அவர் பகிர்ந்த அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில ஜதின் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை ஒரு கும்பல் தாக்குவது தெரிகிறது. ஒரு ஹோட்டல் ஊழியருடனான பிரச்சினையைப் பற்றி ஜதின், ஹோட்டல் மேலாளரிடம் புகார் அளித்திருக்கிறார். அதனால் கோபமடைந்த அந்த ஊழியர் தன் நண்பர்கள் சிலரை அழைத்து வந்து, ஹோட்டலுக்கு வெளியே அந்த குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறார்.