இந்தியாவா? பாரதமா? 2016ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் என்ன சொன்னது?
இந்தியாவின் பெயரை மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த விவாதம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், 2016ஆம் ஆண்டில் இந்தியாவின் பெயரை 'பாரத்' என்று மாற்ற கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது என்பதை நினைவுகூற வேண்டி இருக்கிறது. "பாரதமோ இந்தியாவோ.. நீங்கள் அதை 'பாரதம்' என்று அழைக்க விரும்பினால், 'பாரதம்' என்று அழையுங்கள். யாராவது அதை 'இந்தியா' அழைக்க விரும்பினால், அவர்கள் அதை 'இந்தியா' என்று அழைக்கட்டும்." என்று அந்த மனுவுக்கு அப்போது பதிலளித்த உச்ச நீதிமன்றம் அந்த பொதுநல வழக்கை தள்ளுபடி செய்தது.
'இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 1ல் மாற்றம் ஏற்படாது': உச்ச நீதிமன்றம்
மகாராஷ்டிராவை சேர்ந்தவர் நிரஞ்சன் பட்வால் இந்த பொது நல மனுவை 2016ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அந்த பொதுநல மனுவை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி டிஎஸ் தாக்கூர் மற்றும் நீதிபதி யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு, "எந்த சூழ்நிலையிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 1ல் மாற்றம் இருக்காது." என்று கூறியது. "பாரதம்" என்ற சொல் இந்திய அரசியலமைப்பில் உள்ளது. "இந்தியா, அதாவது பாரதம், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்" என்று இந்திய அரசியலமைப்பின் பிரிவு 1இல் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சட்டப்பிரிவில் மாற்றங்களை ஏற்படுத்தினால் மட்டுமே இந்தியாவின் பெயரை மாற்ற முடியும். ஆனால், இந்த மாற்றம் நடைபெறாது என்று 2016ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் கூறி இருந்தது.