'கோ ஃபர்ஸ்ட்' நிறுவனம் டிக்கெட் விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும்: DGCA நோட்டீஸ்
விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான DGCA, டிக்கெட்டுகளின் விற்பனையை உடனடியாக நிறுத்துமாறு நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள 'கோ ஃபர்ஸ்ட்' விமான சேவை நிறுவனத்திற்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும், நம்பகமான முறையில் சேவையைத் தொடரத் தவறியதற்காக, விமான விதிகள், 1937இன் கீழ், 'கோ ஃபர்ஸ்ட்' நிறுவனத்திற்கு DGCA ஒரு ஷோ காஸ் நோட்டீஸையும் அனுப்பியுள்ளது. 'கோ ஃபர்ஸ்ட்' விமான சேவை நிறுவனம், சென்ற வாரம் திடீரென்று சேவைகளை தற்காலிகமாக நிறுத்த இருப்பதாக அறிவித்தது. மேலும், தங்கள் நிறுவனத்தை திவாலானதாக அறிக்க வேண்டும் என்று கோரி தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் ஒரு மனுவையும் தாக்கல் செய்துள்ளது.
ஷோ காஸ் நோட்டீஸ் பெறப்பட்ட 15 நாட்களுக்குள் பதிலைச் சமர்ப்பிக்க வேண்டும்: DGCA
தற்போதைக்கு, மே 15 ஆம் தேதி வரை டிக்கெட் விற்பனையை நிறுத்தியுள்ள அந்த விமான நிறுவனம், மே 12 ஆம் தேதி வரை விமானங்களை ரத்து செய்துள்ளது. இந்நிலையில், மறு உத்தரவு வரும் வரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ டிக்கெட் முன்பதிவு மற்றும் விற்பனையை நிறுத்துமாறு DGCA உத்தரவிட்டுள்ளது. ஷோ காஸ் நோட்டீஸ் பெறப்பட்ட 15 நாட்களுக்குள் பதிலைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று விமான நிறுவனம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. விமான நிறுவனம் இதற்கு அளிக்கும் பதிலின் அடிப்படையில், அதன் ஏர் ஆபரேட்டர்கள் சான்றிதழை (AOC) தொடர்வது குறித்த முடிவு எடுக்கப்படும்.
இந்த காலவரிசையைப் பகிரவும்