விவேகானந்தர் பாறை-திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி பாலம்
கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி பாலம் கட்டுவதற்கு தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு ஆண்டுதோறும் 80 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தருவதாக கூறப்படுகிறது. இப்படி வரும் சுற்றுலா பயணிகள் முக்கியமாக விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும் அதன் அருகே அமைந்திருக்கும் திருவள்ளுவர் சிலையையும் முதன்மை பொழுதுபோக்கு அம்சங்களாக கருதுகின்றனர். இந்த இடங்களுக்கு செல்ல பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தை சேர்ந்த விவேகானந்தா, குகன்,பொதிகை ஆகிய 3 படகுகள் இயங்கி வருகின்றன. ஆனால், கடல் சீற்றம் இருந்தாலோ அல்லது சூறைக்காற்று வீசினாலோ இந்த படகுகள் இயங்க முடியாமல் நிறுத்தப்படுகின்றன.
கன்னியாகுமாரி கண்ணாடி பாலத்தின் விவரங்கள்
அதனால், சுற்றுலா பயணிகள் மிகவும் சிரமப்படும் சூழல் உருவாகி விடுகிறது. இந்த பிரச்சனையைப் போக்க விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு இடையே ரூ. 37 கோடி செலவில் ஒரு கண்ணாடியால் ஆன இணைப்பு பாலத்தைக் கட்ட தமிழக அரசு உத்தரவிட்டது. கூண்டு வடிவில் கட்டப்பட இருக்கும் இந்த கண்ணாடி இணைப்பு பாலம் 97 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்டிருக்கும். இந்த பாலத்தில் நடந்து போகும் போது வானம், கடல் என்று எல்லாமே தெளிவாக தெரியும். இதில் நடந்து சென்றால் அந்தரத்தில் நடந்து போவது போல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இதை கட்டுவதற்கு தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.