ஜி20 மாநாடு - உலக தலைவர்களை அசரவைத்த தமிழகத்தினை சேர்ந்த தவில் வித்வான்
ஜி20 அமைப்பிற்கு இந்தாண்டு இந்தியா தலைமை வகுத்த நிலையில், இதன் 18வது உச்சிமாநாடு நேற்று முன்தினம் துவங்கி 2 நாட்கள் மிக பிரம்மாண்டமாக தலைநகர் டெல்லியில் நடந்தது. இந்த மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு வருகைத்தந்த உலக தலைவர்கள், பிரதிநிதிகள், நாட்டின் முக்கிய தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் என அனைவருக்கும் இந்திய ஜனாதிபதி திரெளபதி முர்மு தலைமையில் கடந்த செப்.,9ம் தேதி இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்ற அனைவருக்கும் சுவையான இந்தியாவின் பாரம்பரியமிக்க உணவுகள் பரிமாறப்பட்டதோடு, அவர்களது செவிக்கு இனிமையான இசை நிகழ்ச்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த இசை நிகழ்ச்சியில் பல்வேறு மாநில பாரம்பரியங்களை பறைசாற்றும் விதமான இசைகள் இசைக்கப்பட்டது என்று செய்திகள் தெரிவிக்கிறது.
நாதஸ்வரம் மற்றும் தவில் இசையில் மெய்மறந்த உலக தலைவர்கள்
இந்நிலையில், தமிழகத்தின் பெருமையை எடுத்துரைக்கும் வகையில் இசைக்கப்பட்ட தவில் அங்கு கூடியிருந்த உலக தலைவர்கள் அனைவரையும் மெய்மறந்து ரசிக்க வைத்துள்ளது. இதனை இசைத்த தவில் வித்வான் மணிகண்டன்(46)சிவகங்கை அரசு இசைப்பள்ளியில் ஆசிரியர் பணியில் உள்ளாராம். இவரையும், திருவாரூரை சேர்ந்த அரசு இசைப்பள்ளி ஆசிரியரான நாதஸ்வர கலைஞர் இளையராஜாவையும் மத்திய அரசு இந்நிகழ்ச்சிக்காக டெல்லிக்கு அழைத்து சென்றுள்ளனர். இதுகுறித்து தவில் வித்வான் மணிகண்டன் கூறுகையில், "இந்த மாநாட்டில் வாசிக்க 75 இசைக்கலைஞர்கள் அந்தந்த மாநில இசைக்கருவிகளுடன் வந்திருந்தனர். இதனுள் கிட்டத்தட்ட அரை மணிநேரம் இசைக்கப்பட்ட நமது தவில் மற்றும் நாதஸ்வர இசையினை உலகத்தலைவர்கள் மெய்மறந்து ரசித்தனர். சபாக்களில் மட்டுமே இதுவரை இசைக்கப்பட்ட இந்த இசை தற்போது சர்வதேச மாநாட்டில் இசைக்கப்பட்டது பெருமையளிக்கிறது" என்று கூறியுள்ளார்.