கடுமையான வெப்ப அலைகளின் தாக்கம் மேலும் உயரும்: நிபுணர்கள்
இந்தியாவில் கடுமையான வெப்ப அலைகள் வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வடமேற்கு, மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவிலும், பாகிஸ்தானின் சில பகுதிகளிலும், காலநிலை நெருக்கடியின் தாக்கம் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடுமையான வெப்ப அலைகளின் அதிர்வெண் எதிர்காலத்தில் பன்மடங்கு உயர வாய்ப்புள்ளது என்று காந்திநகரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின்(IIT) சிவில் இன்ஜினியரிங் மற்றும் புவி அறிவியல் பேராசிரியர் விமல் மிஸ்ரா தெரிவித்துள்ளார். இதுவரை, காலநிலை நெருக்கடியின் தாக்கங்கள் குறித்து பல ஆய்வுகளை மிஸ்ரா எழுதியுள்ளார். 2022 கோடை காலத்தில், இந்தியா மற்றும் பாகிஸ்தானின் சில பகுதிகள் அதிக வெப்பநிலையை பதிவு செய்தன என்றும், இதனால் இரு நாடுகளிலும் குறைந்தது 90 இறப்புகள் ஏற்பட்டன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வெப்பம் காரணமாக இறப்புகள் 55% அதிகரித்துள்ளது
2022ஆம் ஆண்டில் ஏற்பட்டதைப் போல, வரும் ஆண்டுகளில் வெப்ப அலைகளின் தாக்கம் அதிகரிக்கப் போகிறது என்பதை அவரது குழுவின் தொடர்ச்சியான பகுப்பாய்வு காட்டுகிறது என்றும் அவர் கூறினார். 2031 மற்றும் 2060ஆம் ஆண்டுகளுக்கு இடையில் 'மெகா' வெப்ப அலைகள் ஏற்படும் என்றும் 2071 மற்றும் 2100ஆம் ஆண்டுகளுக்கு இடையில் அது இரட்டிப்பாகும் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. பல சமீபத்திய ஆய்வுகளும் அதிகரித்து வரும் வெப்பநிலையை சுட்டிக்காட்டியுள்ளன. இந்தியாவில் கடுமையான வெப்பம் காரணமாக இறப்புகள் 55% அதிகரித்துள்ளதாக கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட வருடாந்திர லான்செட் அறிக்கை கூறி இருந்தது. கடந்த ஆண்டு, இந்தியா மற்றும் பாகிஸ்தானைத் தாக்கிய வெப்ப அலைகள், 30 மடங்கு அதிகமாக இருந்தது என்று அந்த லான்செட் அறிக்கை கூறுகிறது.