இலவச ஆதார் அப்டேட்டிற்கான காலக்கெடுவை நீட்டித்திருக்கும் UIDAI அமைப்பு
இந்தியக் குடிமகனாக இருக்கும் அனைவரும் வைத்திருக்க வேண்டிய முக்கியமான ஒரு ஆவணமாக இருக்கிறது ஆதார் அட்டை. ரயில்வே முன்பதிவு முதல் சிம் கார்டு வாங்குவது வரை அனைத்து இடங்களிலும் செல்லுபடியாகும் ஒரு ஆவணமாகவும், அனைத்து வயதினரும் கொண்டிருக்கும் ஒரு ஆவணமாகவும் விளங்கி வருகிறது ஆதார். இவ்வளவு முக்கியமானதாகக் கருதப்படும் ஆதாரில் இடம்பெற்றிருக்கும் தகவல்கள் சரியானதாக இருக்க வேண்டியது அவசியம். எனவே, 10 வருடங்களுக்கு ஒரு முறை ஆதாரை புதுப்பிக்க பரிந்துரை செய்கிறது மத்திய அரசு. ஆதாரில் பெயர், பிறந்த தேதி மற்றும் வீட்டு முகவரி ஆகிய சில தகவல்களை இணையத்தின் மூலமாக நாமே அப்டேட் செய்து கொள்ள முடியும்.
இலவச ஆதார் அப்டேட்:
இவ்வாறு இணையத்தின் மூலம் நாமாக மாற்றம் செய்யும் அப்டேட்களுக்கு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும். ஆனால், கடந்த ஜூன் 14 வரை இலவசமாகவே அப்டேட் செய்து கொள்ளலாம் எனத் அறிவித்திருந்தது UIDAI அமைப்பு. தற்போது, அந்தக் காலக்கெடுவை நீட்டித்து செப்டம்பர் 14-ஆக அறிவித்து அந்த அமைப்பு. எனவே, செப்டம்பர் 14-ம் தேதி வரை நம் ஆதார் அட்டையில் பெயர், பிறந்த தேதி மற்றும் வீட்டு முகவரி ஆகிய தகவல்களைக் கட்டணமின்றி இலவசமாக மாற்றம் செய்து கொள்ள முடியும். ஆனால், இந்த இலவச சலுகையானது ஆன்லைன் மூலம் நாமாக மாற்றம் செய்தால் மட்டுமே. ஆதார் மையத்தின் மூலம் மாற்றம் செய்யும் பட்சத்தில் ரூ.50-ஐ சேவைக் கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும்.