பாலக்காட்டில் ரயில் மோதியதில் குப்பை அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்த 4 தமிழக தொழிலாளர்கள் உயிரிழப்பு
பாலக்காடு அருகே கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 4 துப்புரவு பணியாளர்கள் உயிரிழந்ததாக ரயில்வே அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தி நிறுவனம் பிடிஐ தெரிவித்துள்ளது. திருவனந்தபுரம் நோக்கிச் சென்ற கேரள எக்ஸ்பிரஸ், ஷோரனூர் ரயில் நிலையம் அருகே, ரயில் நிலையத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஷோரனூர் பாலம் அருகே உள்ள ரயில் பாதையில் குப்பைகளை அகற்றிக் கொண்டிருந்த நான்கு துப்புரவுத் தொழிலாளர்கள் மீது மோதியதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மோதிய வேகத்தில் துப்புரவு பணியாளர்கள் தண்டவாளத்தில் சிக்கி உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் சுமார் பிற்பகல் 3.05 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஆற்றில் விழுந்த ஒருவரின் சடலத்தை தேடும் பணி தொடக்கம்
விபத்து நடந்த இடத்தில் இருந்து மூன்று சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், பாரதப்புழா ஆற்றில் விழுந்ததாக நம்பப்படும் நான்காவது தொழிலாளியைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதற்கிடையே, சம்பவ இடத்திற்கு ரயில்வே காவல்துறைக் குழு சம்பவ இடத்திற்கு வந்துள்ளது. ஷோரனூர் ரயில்வே காவல்துறை அதிகாரி ஒருவர் இதுகுறித்து கூறுகையில், "தொழிலாளர்கள் ரயில் நெருங்கி வருவதைப் பார்க்காமல் இருந்திருக்கலாம். இது விபத்துக்கு வழிவகுத்தது. எனினும், தொடர்ந்து விசாரணைகள் நடந்து வருகின்றன." என்று குறிப்பிட்டார். இதற்கிடையே, உயிரிழந்த இந்த நான்கு தொழிலாளர்களும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.