இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது - போலீசார் அதிரடி
சென்னை மாநகரில் தி.நகர் பகுதியில் பாலன் இல்லம் என்னும் தமிழக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று(அக்.,27)இரவு 9 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் கற்கள், பாட்டில்கள் உள்ளிட்டவைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆனால் இந்த தாக்குதல் நடத்தப்பட்ட பொழுது அலுவலகத்திற்குள் யாரும் இல்லை என்பதால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து அக்கட்சி நிர்வாகிகள் மாம்பலம் காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளனர் என்று கூறப்படுகிறது. அந்த புகாரின் பேரில், காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று ஆய்வினை மேற்கொண்டனர்.
மது போதையில் தாக்குதல் நடத்தியதாக தகவல்
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி, இந்த சம்பவம் குறித்து காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், கட்சி அலுவலகத்திற்கு 24 மணிநேரமும் காவல்துறை பாதுகாப்பு அளித்து, அலுவலகத்தில் உள்ள கட்சியினரின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், இச்சம்பவத்திற்கு அக்கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழுவினர் தங்கள் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்காமல் தண்டனை பெறுவதை உறுதி செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, இதில் சம்பந்தப்பட்ட அலெக்ஸ், பார்த்திபன், அருண்குமார், பாரதி என்னும் 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் நால்வரும் மதுப்போதையில் இவ்வாறு அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.