தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் முன்னாள் அமைச்சர் பொன்முடி
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தற்போதைய தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு விழுப்புரத்திலுள்ள லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. அவ்வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி கடந்த 2016ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டனர். இவ்வழக்கு மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதுகுறித்த விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், நேற்று(டிச.,21)இவரது வழக்குக்கு தீர்ப்பு வெளியானது. அதன்படி, அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் 3 ஆண்டுகால சிறை தண்டனை மற்றும் ரூ.50 லட்சம் அபராதம் என்று உத்தரவிடப்பட்டது. எனினும், மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்கள் இந்த தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
வழக்கு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை ?
இந்த 30 நாட்களுக்குள் பொன்முடி மற்றும் அவரது மனைவியும் விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் அத்தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே அடுத்த 12 நாட்கள்(ஜன.,1 வரை)அனைத்து நீதிமன்றங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனால் வரும் திங்கட்கிழமை உச்சநீதிமன்றத்தில் இவரது வழக்கு மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. அவசர வழக்காக இது தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளிக்குமா?என்னும் கேள்வி தற்போது எழுந்துள்ளது. இதனிடையே பொன்முடிக்கு தண்டனை விதிக்கப்பட்டதால் அவர் வகித்தப்பதவிகள் அனைத்தும் பறிக்கப்பட்டுள்ளது. இத்தகைய இக்கட்டான சூழலில் பொன்முடி இன்று(டிச.,22)முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்துள்ளார். இச்சந்திப்பின் பொழுது முதல்வரோடு பொன்முடி இவ்வழக்கு குறித்து ஆலோசனை நடத்தினார் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.