சிக்கிம் ஜனநாயக முன்னணியில் இணைந்தார் முன்னாள் இந்திய கால்பந்து வீரர் பைச்சுங் பூட்டியா
இந்திய கால்பந்து அணியிலிருந்து கடந்த 2014ம்.,ஆண்டு ஓய்வுபெற்றார் பைச்சுங் பூட்டியா. அதன்பின்னர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த இவர் அந்த ஆண்டில் இருந்தே தேர்தல் களத்தில் இறங்கி போட்டியிட துவங்கியுள்ளார். சில காலங்களுக்கு பிறகு திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய இவர், ஹம்ரோ சிக்கிம் என்னும் கட்சியினை துவங்கினார். அதனை தொடர்ந்து சிக்கிம் மாநிலத்தின் தற்போதைய ஆளும் கட்சியான சிக்கிம் கிராந்திகரா மோர்ச்சா கட்சியுடன் இணைந்து கடந்த 2019ம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் அவர் அந்த தேர்தலில் வெற்றி பெறவில்லை. இதற்கிடையே இவர் சிக்கிம் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான பவன்குமார் சாம்லிங்கின் சிக்கிம் ஜனநாயக கட்சியில் இணையவுள்ளார் என்று கடந்த செப்டம்பர் மாதம் செய்திகள் வெளியானது.
அதிகாரபூர்வமாக தன்னை சிக்கிம் ஜனநாயக முன்னணியில் இணைத்துக்கொண்டார்
அந்தவகையில் தற்போது பைச்சுங் பூட்டியா செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "சிக்கிம் ஜனநாயக கட்சியிலிருந்த ஊழல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்ட தலைவர்கள் தற்போது வெளியேறியுள்ளனர். இதனால் சிக்கிம் ஜனநாயக கட்சி ஊழல் கறையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது"என்று கூறியுள்ளார். மேலும், 'நீண்டக்காலமாக பவன்குமார் ஊழல் செய்பவர் என்னும் குற்றச்சாட்டினை சிக்கிம் கிராந்திகரா மோட்சா கட்சி குற்றம்சாட்டி வந்தது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் இவர்களால் ஒரு வழக்கு கூட அவருக்கு எதிராக தொடர முடியவில்லை' என்றும், 'இதன் மூலம் அவர் ஊழல் செய்யாதவர் என்பது உறுதியாகிறது' என்றும் பேசியுள்ளார். அதனையடுத்து அவர், சிக்கிம் ஜனநாயக முன்னணியில் தனது ஹம்ரோ சிக்கிம் கட்சியினை அதிகாரபூர்வமாக இன்று(நவ.,23) இணைத்து கொண்டுள்ளார்.