முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு: முன்னாள் மனைவி பீலா ஐஏஎஸ் புகார்
செய்தி முன்னோட்டம்
முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது அவரது முன்னாள் மனைவியும், முன்னாள் தமிழக சுகாதாரத்துறை செயலாளருமான பீலா ஐஏஎஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ராஜேஷ் தாஸ் பதவியில் இருந்தபோது தனக்கு கீழ் பணிபுரியும் பெண் ஐபிஎஸ் அதிகாரியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்காக, விழுப்புரம் நீதிமன்றத்தால், 2023ஆம் ஆண்டு குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டார்.
அதன் தொடர்ச்சியாக, அவரை விவாகரத்து செய்வதாக பீலா ராஜேஷ் அறிவித்தார்.
அவர்களின் விவாகரத்து வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த நேரத்தில் மற்றுமொரு புகாரை பீலா தொடுத்துள்ளார்.
அந்த புகாரில், ராஜேஷ் தாஸ், பீலா தங்கி இருக்கும் வீட்டிற்கு சென்று தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
தகராறு
எதற்காக தகராறு செய்தார் ராஜேஷ் தாஸ்?
மே 20 திங்கள் அன்று, ராஜேஷ் தாஸ், சென்னையில் தங்கியுள்ள அவரது வீட்டிற்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக புகார் எழுப்பினார்.
இந்த மின்சார துண்டிப்பிற்கு காரணம், அவரது முன்னாள் மனைவி பீலா வெங்கடேசன் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
காரணம், பீலா தற்போது தமிழகத்தின் எரிசக்தி செயலாளராக உள்ளார்.
குடியிருக்கும் வீட்டிற்கு மின் இணைப்பை துண்டித்து, தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தார் பீலா என ராஜேஷ் தெரிவித்தார்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியின்படி, மே 19, ஞாயிற்றுக்கிழமை மின் இணைப்பை துண்டிக்க, தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் ராஜேஷ் தாஸின் வீட்டிற்குச் சென்றனர்.
இருப்பினும், அவர் எதிர்த்ததைத் தொடர்ந்து அவர்கள் வெளியேறினர். மறுநாள், மே 20, மின்வாரிய அதிகாரிகள் மாநில எரிசக்தி செயலாளரின் கடிதத்துடன் திரும்பினர்.
மின்சாரம் துண்டிப்பு
முறையான நீதிமன்ற உத்தரவின்றி மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக ராஜேஷ் தாஸ் கருத்து
"நான் வீட்டில் வசிப்பதால், சப்ளையை துண்டிக்கும்முன் எழுத்துப்பூர்வமாக என் கருத்தைத் பெறவேண்டும். மின் இணைப்பில் எந்த நிலுவையோ அல்லது நீதிமன்ற உத்தரவோ அவர்களிடத்தில் இல்லை. வீட்டு உரிமையாளர் அவ்வாறு செய்ய விரும்பினாலும், குத்தகைதாரர் இருக்கும்போது EB அதைச்செய்ய முடியாது. ஆனால் அவர்கள் கட்டிடத்திற்கு வெளியே உள்ள மின்கம்பத்தில் ஏறி சப்ளையை துண்டித்தனர்" என்று ராஜேஷ் தெரிவித்தார்.
குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த பீலா, கடந்த 3 மாதங்களாக வீடு காலியாக இருப்பதாகவும், மின் இணைப்பு மற்றும் நிலம் தனது பெயரில் உள்ளதால் தேவையில்லாமல் மின்கட்டணத்தில் செலவு செய்ய விரும்பவில்லை என்றும் கூறினார்.
"ஆக்கிரமிப்பாளர் ஆதார ஆவணத்தை வழங்க போதுமான அவகாசம் வழங்கப்பட்டது. அவர் அதை வழங்கத் தவறியதால், டாங்கெட்கோ அதிகாரிகள் தங்கள் கடமையைச் செய்தனர்" எனத்தெரிவித்தார்.