கொடைக்கானல் சுற்றுலாத்தலங்களுக்கு வரும் வாகனங்களுக்கு புதிய விதிகள் அமல்
கொடைக்கானல் மலைப்பகுதியில் அமைந்துள்ள சுற்றுலாத்தலங்களுக்கு செல்ல பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. கொடைக்கானலில் 12 மைல் அளவிலான சுற்றுச்சாலையில் தான் குணா குகை, மோயர் பாயிண்ட், தூண் பாறை, பைன் மரக்காடுகள் உள்ளிட்ட இடங்கள் அமைந்துள்ளது. இந்த இடங்கள் அனைத்தும் சமீபக்காலத்தில் மூடப்பட்ட நிலையில் இன்று(ஆகஸ்ட்.,18) முதல் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. அதன்படி, கொடைக்கானல் வனப்பகுதிக்குள் சுற்றுலா செல்ல நுழையும் வாகனங்களுக்கான வாகன பதிவு சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் மற்றும் காப்பீடு சான்றிதழ் என 4 சான்றிதழ்கள் கட்டாயம் இருக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
சான்றிதழ்கள் இல்லையெனில் வாகனங்களுக்கு அனுமதி இல்லை
மேற்கூறப்பட்ட சான்றிதழ்கள் இல்லையெனில் அந்த வாகனம் உள்ளே செல்ல அனுமதிக்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல், அந்தந்த சுற்றுலாத்தலங்களில் தான் இதுவரை சுற்றுலாப்பயணிகள் உள்ளே நுழைவதற்கான கட்டணமும், வாகன நுழைவு கட்டணமும் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் இனிமேல் இதற்கான கட்டணங்கள் மொத்தமும் மோயர் பாயிண்டில் வைத்தே வசூலிக்கப்பட்டு அங்கேயே அதற்கான ரசீதுகளும் விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, பேரிஜம் ஏரி பகுதிக்கு நாளொன்றுக்கு 50 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத்தலங்கள் மூடப்படும் என்றும் வனத்துறை அதிகாரி யோகேஷ்குமார் மீனா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.