மைசூரு தசரா விழா: முதல் முறையாக இசை நிகழ்ச்சி நடத்தும் இசைப்புயலும், இசைஞானியும்!
உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா திருவிழாவில், முதன்முறையாக தமிழ்நாட்டை சேர்ந்த இசையமைப்பாளர்கள் 'இசைஞானி' இளையராஜா மற்றும் 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரின் இசைக் கச்சேரி நடைபெறவுள்ளது. இளைஞர் தசரா விழாவின் சார்பில், இன்று மாலை 6 மணிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் நாளை மாலை 6 மணிக்கு இளையராஜாவின் இசை நிகழ்ச்சிகள் நடைபெறும். இளையராஜா, "மைசூருவில் முதல்முறையாக இசை கச்சேரி நடத்துவதற்கு ஆர்வமாக இருக்கிறேன்" எனக் கூறியுள்ளார். முன்னதாக இலக்கிய தசராவில், தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மொழிகளுக்கான கவிஞர்களின் கவிதைகள் வாசிக்கப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக புதுவை தமிழ்க் கவிஞர் இந்திரன் தனது கவிதையை வாசித்தார், இதற்கு கன்னட பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
மைசூரு மன்னர்களின் வெற்றியை கொண்டாட துவங்கிய திருவிழா
கி.பி. 1610-ஆம் ஆண்டில் இருந்து மைசூரு மன்னர்கள் போரில் வென்றதை நினைவுகூரும் விதமாக, வருடம் தோறும் விஜயதசமி பண்டிகையின் போது 10 நாட்கள் தசரா விழா கொண்டாடப்படுகிறது. நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, கர்நாடக அரசின் சார்பில் இந்த விழா பிரம்மாண்டமாக அரசு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் 414-வது ஆண்டாக மைசூரு தசரா விழா கடந்த 3-ஆம் தேதி தொடங்கியது. இது 10 நாட்கள் நடைபெறும்ம் அதாவது வரும் அக்டோபர் 12 ஆம் தேதி வரை நடைபெறும். இதில் உணவு திருவிழா, திரைப்பட திருவிழா, கிராமிய விழா, மலர்க் கண்காட்சி, பொருட்காட்சி, இசைக் கச்சேரி, இலக்கிய விழா மற்றும் கன்னட கலைப்பண்பாட்டை மையமாகக் கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.