100 பில்லியன் டாலர்கள் மதிப்பை அடையும் வாய்ப்பைக் கொண்டிருக்கும் போன்பே மற்றும் ஃப்ளிப்கார்ட்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் வால்மார்ட் வசமிருக்கும் ஃபிளிப்கார்ட் மற்றும் போன்பே ஆகிய நிறுவனங்கள் 100 பில்லியன் டாலர் மதிப்புடைய வணிகங்களாக வளர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக, அந்நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் மாநாட்டில் தெரிவித்திருக்கிறார் வால்மார்டின் தலைமை நிதி அதிகாரி.
வெளிநாட்டு சந்தைகளில் 200 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான மொத்த வணிக அளவு என்ற வால்மார்டின் இலக்கை எட்டுவதற்கு முக்கிய காரணியாக ஃப்ளிப்கார்ட் மற்றும் போன்பே ஆகிய நிறுவனங்கள் இருக்கும் எனவும் தெரிவித்திருக்கிறார் அவர்.
ஏப்ரல் 20-ல் நிறைவடைந்த முதல் காலாண்டில் ஃப்ளிப்கார்ட் நிறுவனமானது இரட்டை இலக்கு விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்திருக்கிறது. இந்தியாவில் உள்ள பல நகரங்களில் புதிய வியாபாரிகள் இணைந்தது, அதன் வணிக விற்பனை 50% உயர்ந்ததுமே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா
போன்பேயில் புதிய முதலீடு:
ஃபிளிப்கார்டைத் தொடர்ந்து போன்பே நிறுவனமும் இந்தியாவில் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. வருடத்திற்கு 1 ட்ரில்லியன் மதிப்புடைய பரிவர்த்தனைகள் போன்பே யூபிஐ சேவை மூலம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவின் டிஜிட்டல் கட்டண சேவை சந்தையில் 46%-த்ததுடன் முன்னணியில் போன்பே இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது NPCI (National Payments Corporation of India).
மேலும், இந்தியாவில் போன்பே நிறுவனமானது 400 மில்லியன் பதிவுசெய்யப்பட்ட பயனர்களைக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் தான், போன்பேயின் வணிகத்தை மேலும் மேம்படுத்த 12 பில்லியன் டாலர்கள் என்ற முன்பண மதிப்பீட்டில் 200 மில்லியன் டாலர்களை வால்மார்ட் நிறுவனம் முதலீடு செய்தது குறிப்பிடத்தக்கது.