சென்னையில் மீனவர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்
சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினம்பாக்கம் வரையில் அமைந்துள்ள லூப் சாலையில் மீன் கடைகள் இருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தது. இதனால் அங்குள்ள ஆக்கிரமைப்புகளை அகற்றவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கினை விசாரித்தது. தொடர்ந்து ஆக்கிரமைப்புகள் அகற்றப்பட்டது குறித்த அறிக்கையினை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்பேரில், லூப்சாலையிலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதாகவும், மீனவர்களின் எதிர்ப்பினை எதிர்கொண்டு 75 மீன்கடைகள்,15 குடிசைகள்,21 பொட்டிக்கடைகள் அகற்றப்பட்டதாக சென்னை மாநகராட்சித்தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து மீன்சந்தை கட்டுமான பணிகள் முடியும்வரை சாலையின் மேற்கு பக்கத்தில் மீன் கடைகளை அமைக்க அனுமதிக்க வேண்டும். போக்குவரத்தினை முறைப்படுத்துகிறோம் என்று சென்னை மாநகராட்சி கூறியது. இதனை மனுவாக தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
வழக்கின் விசாரணை கே]ஜூன் மாதத்திற்கு ஒத்திவைப்பு
அதனடிப்படையில், இன்று(ஏப்ரல்.,19)இந்த வழக்கு நீதிபதிகள் பாலாஜி மற்றும் எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சாலையின் மேற்கு பகுதியில் உள்ள நடைபாதையில் தற்காலிகமாக மீன்கடைகள் அமைக்கப்படுவதாகவும், போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் மீன்கடைகள் அனைத்தும் ஒழுங்குப்படுத்தப்படும் என்றும் மாநகராட்சி தரப்பில் கோரப்பட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மேலும் மீன்கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு இடங்கள் ஒதுக்கப்படும் என்றும் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்துக்கொண்ட நீதிபதிகள் சென்னை மெரினா கடற்கரை லூப்சாலையில் போக்குவரத்திற்கு எந்த இடையூறும் இல்லாமல் மீன்கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதுகுறித்த விசாரணை வரும் ஜூன் 19ம்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த உத்தரவின்பேரில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் தற்காலிகமாக தங்கள் போராட்டத்தினை வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.