உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களின் முதல் வீடியோ காட்சிகள் வெளியானது
கடந்த 10 நாட்களாக உத்தரகாண்டில் சுரங்கப்பாதையின் இடிபாடுகளில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களின் முதல் வீடியோ காட்சிகள் இன்று அதிகாலை வெளியாகியுள்ளது. தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்களை அனுப்புவதற்காக நேற்று இரவு இடிபாடுகளுக்குள் வெற்றிகரமாக நுழைக்கப்பட்ட ஆறு அங்குல குழாய் வழியாக, சுரங்கப்பாதைக்குள் அனுப்பப்பட்ட கேமரா மூலம் தொழிலாளர்களின் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டுள்ளன. அந்த தொழிலாளர்களுடன் மீட்பு அதிகாரிகள் வாக்கி டாக்கி மூலம் பேசியதாகவும் கூறப்படுகிறது. வெளியான வீடியோவில், மீட்பு அதிகாரிகள், குழாய் மூலம் அனுப்பப்பட்டுள்ள கேமராவின் முன் தொழிலாளர்களை வரச் சொல்லி, அவர்களிடம் உரையாடுவது போல காட்சிகள் உள்ளது.
குழாய் மூலம் உணவு வழங்க திட்டம்
நேற்று வெற்றிகரமாக உள்நுழைக்கப்பட்ட குழாய் மூலம், சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு, கண்ணாடி பாட்டில்கள் மூலம் உணவு அனுப்ப பட்டது. மருத்துவர்களும், நிபுணர்களும் பரிந்துரைத்ததன் பேரிலேயே, உணவு தயாரிக்கப்பட்டது எனவும் ANI தெரிவிக்கிறது. மேலும், இந்த குழாய் மூலம் தொழிலாளர்களுக்கு மொபைல்கள் மற்றும் சார்ஜர்கள் அனுப்பப்படும் என மீட்பு பணி பொறுப்பாளர் கர்னல் தீபக் பாட்டீல் தெரிவித்தார். முன்னதாக, சுரங்கப்பாதையின் இடிபாடுகளுக்குள் துளையிடப்பட்ட இரும்பு குழாய்கள் மூலம் உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தாலும், சூடாக உணவு அனுப்பப்படுவது இதுவே முதல்முறை. கட்டப்பட்டு வரும் இந்த சுரங்கப்பாதை, பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய இந்து புனிதத் தலங்களுக்கான இணைப்பை மேம்படுத்தும் தேசிய உள்கட்டமைப்பு முயற்சியான சார் தாம் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
"எங்களை சீக்கிரம் காப்பாற்றுங்கள்"
"உத்தர்காசி, சில்க்யாராவில் கட்டுமான இடிபாடுகளுக்கிடையே, சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இடிபாடுகளுக்கிடையே 6 இன்ச் அகலம் கொண்ட குழாய் ஒன்று வெற்றிகரமாக நுழைக்கப்பட்டுள்ளது. இப்போது இதன் மூலம், உணவு பொருட்கள், மருத்துவ பொருட்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு தேவைப்படும் அனைத்து பொருட்களும் எளிதில் அனுப்பப்படும்" என உத்தரகாண்ட் முதலமைச்சர் தாமி எக்ஸ்-இல் பதிவிட்டிருந்தார். இதற்கிடையே, கேமராவில் மீட்பு குழுவினருடன் உரையாடிய தொழிலாளர்கள், "எங்களுக்கு உணவு கிடைக்கிறது ஆனால் நாங்கள் உடலளவிலும், மனஅளவிலும் மிகவும் மோசமான நிலைமையில் உள்ளோம். தயவு செய்து எங்களை சீக்கிரம் வெளியே கொண்டு வாருங்கள். நாளுக்கு நாள் இங்கே மிகவும் கடினமாக உள்ளது" என கோரிக்கை வைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது.