ஜனவரி 19 முதல் 5 வது முறையாக கும்பமேளா பகுதியில் தீ விபத்து
செய்தி முன்னோட்டம்
உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளாவில், காலியாக இருந்த 'தனியார் முகாமில்' தீ விபத்து ஏற்பட்டது.
கும்ப மேளா நடைபெறும் பகுதியை ஒட்டி உள்ள செக்டார் 19 இல் உள்ள ஒரு 'ஆசிரமத்தில்' ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு கூடாரங்கள் எரிந்து நாசமான இரண்டு நாட்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் ஒரு தீ விபத்து நிகழ்ந்தது.
இந்த குறிப்பிட்ட விபத்து 8வது செக்டாரில் நடந்ததாக ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பான கூடுதல் விவரங்கள் இன்னும் வெளியாகாத நிலையில், தலைமை தீயணைப்பு அதிகாரி பிரமோத் குமார் சர்மா, இது ஒரு 'சிறிய' தீ விபத்து என்றும், அது சிறிது நேரத்திலேயே அணைக்கப்பட்டதாகவும் கூறினார்.
தீ விபத்து
சமீபத்தில் அதிகரிக்கும் தீ விபத்து, அதிகரிக்கும் உயிரிழப்புகள்
மகா கும்பமேளாவில் சமீபத்தில் நடந்த இரண்டு தீ விபத்துகள் உட்பட மொத்தம் ஐந்து தீ விபத்துகள் நிகழ்ந்துள்ளன.
முதலாவது ஜனவரி 19 ஆம் தேதியும், இரண்டாவது மற்றும் மூன்றாவது சம்பவங்கள் ஜனவரி 30 மற்றும் பிப்ரவரி 17 ஆம் தேதிகளிலும் நடந்தன.
மேலும், ஜனவரி 29 அன்று இங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30 பக்தர்கள் உயிரிழந்தனர்.
மௌனி அமாவாசையின் போது பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராட எதிர்பார்த்ததை விட அதிகமான மக்கள் திரண்டதால் இந்த நெரிசல் ஏற்பட்டது.
மறுபுறம் பிப்ரவரி 15 அன்று, புது டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 18 பேர் உயிரிழந்தனர். அந்த ரயில் நிலையம் பிரயாகராஜுக்குச் செல்லும் பக்தர்களால் நிரம்பியிருந்தது.