ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்த கப்பல் சேவைகளை தொடங்க முடிவு
ராமநாதபுரம் மாவட்டத்தின் கடற்கரை பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்த கப்பல் பயண திட்டத்தை தொடங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் சுற்றுலாவை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில், ராமேஸ்வரம், தனுஷ்கோடி, பாம்பன் பாலம் உள்ளிட்ட எண்ணற்ற சுற்றுலா தளங்கள் உள்ளன. மேலும், அங்கு பல்வேறு சிறுசிறு தீவுகளும் நீண்ட கடற்கரையும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், சிறிய ரக கப்பல் சேவைகளை அங்கு அறிமுகப்படுத்தி, அதன் மூலம் சுற்றுலாத் தளங்களை இணைக்க தமிழக அரசு முடிவு செய்து கப்பல் சேவைகளை தொடங்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கப்பல் சேவை குறித்த விரிவான தகவல்
முதற்கட்டமாக ராமேஸ்வரம், பாம்பன், தேவிபட்டினம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளை இணைக்கும் வகையில் கப்பல் சேவையை தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த கப்பல்கள் சுமார் 3 மணி நேரத்திற்கு 50 பயணிகளை கொண்டு இயக்கும் வகையில் செயல்பட உள்ளன. இதற்காக சுற்றுலா கப்பல்களை இயக்க விரும்பும் நிறுவனங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, சுற்றுலா பயணிகளுக்கான கப்பல்களை இயக்க விரும்பும் நிறுவனங்கள் அக்டோபர் 7 ஆம் தேதிக்குள் தமிழக அரசுக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தங்கள் மாவட்டத்தின் கடற்கரை பகுதிகளில் சுற்றுலாவை மேம்படுத்த அரசு கப்பல் சேவையை தொடங்க உள்ளது அந்த மாவட்ட மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.