மத்திய பிரதேசம்: குனோ தேசிய பூங்காவில் மீண்டும் ஒரு பெண் சிறுத்தை பலி
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசிய பூங்காவில் 'தாத்ரி' என்ற பெண் சிறுத்தை இன்று(ஆகஸ்ட்-2) காலை இறந்து கிடந்தது. மரணத்திற்கான காரணத்தை அறிய அதிகாரிகள் பிரேத பரிசோதனை செய்து வருகின்றனர். ஆசிய சிறுத்தைகள் இந்தியாவில் முழுவதுமாக அழைந்துவிட்டதால், மீண்டும் சிறுத்தைகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் நோக்கத்தோடு, கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி 'பிராஜெக்ட்-சீட்டா' என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் 20 ஆப்பிரிக்க சிறுத்தைகள் விமானம் மூலம் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டன. அப்படி மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவிற்கு வரவழைக்கப்பட்ட 20-சிறுத்தைகளில் 9 சிறுத்தைகள் இதுவரை உயிரிழந்துள்ளன. சண்டைகள், நோய்கள், விபத்துகள் மற்றும் வேட்டையாடும்போது ஏற்படும் காயங்கள் ஆகியவை இந்த இறப்புகளுக்கு சாத்தியமான காரணங்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ரேடியோ காலர்களைப் பயன்படுத்துவது தான் காரணமா?
வெப்ப மாற்றங்கள், வானிலை மாற்றங்கள் ஆகியவையும் இதற்கு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. சிறுத்தைகள் மீது ரேடியோ காலர்களைப் பயன்படுத்துவதனால் தான் இந்த இறப்புகள் ஏற்படுகின்றன என்ற சர்ச்சையும் உள்ளது. ரேடியோ காலர்கள் சிறுத்தைகள் இருக்கும் இடத்தை 'ட்ராக்' செய்வதற்காக பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகும். இந்த ரேடியோ காலர்கள் எப்போதும் சிறுத்தைகளின் கழுத்திலேயே இருப்பதால், மழை காலங்களில் சிறுத்தைகளுக்கு தோல் நோய் ஏற்பட்டு, அவை உயிருழப்பதாகவும் சில வல்லுநர்கள் கூறுகின்றனர். மேலும், இந்தியாவில் ஆப்பிரிக்க சிறுத்தைகள் இப்படி உயிரிழப்பது குறித்து, ஆப்பிரிக்க வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த திட்டத்தை வழிநடத்தும் குழுவில் உறுப்பினர்களாக இருக்கும் ஆப்பிரிக்க நிபுணர்கள், இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு எழுதிய கடிதத்தில் திட்ட மேலாண்மை குறித்து கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளனர்.